fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பயணக் கட்டுப்பாடு – மன விரக்தியில் இருவர் தற்கொலை – யாழில் சம்பவம்!

கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று முன்தினம் (06) தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரிடம் கோரியுள்ளது.

அத்துடன், அந்த நிறுவனத்தின் அலுவலகர்கள் அவரிடம் சென்று பணத்தைக் கோரியுள்ளனர். தன்னிடம் 35 ஆயிரம் ரூபாய்தான் தற்போது உள்ளது. மிகுதியை கிடைத்தவுடன் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நிதி நிறுவன அலுவலகர்கள் அவரை ஏசியுள்ளனர்.

இந்த நிலையில் மன விரக்தியில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்” என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்கள் என தினமும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஒருவர் பயணத்தடையினால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தமையினால் ஏற்பட்ட மன விரக்தியில் தவறான முடிவெடுத்து தனது உயிரைத் துறந்துள்ளார்.

வதிரி கரவெட்டியைச் சேர்ந்த கோபசிங்கம் மயூரதன் (வயது-36) என்பவரே நேற்று (06) இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“அவர் சில தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் தினமும் ஆலயங்கள், ஊர்கள், வெளி மாவட்டங்கள் என மோட்டார் சைக்கிளில் பயணித்து வருபவர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தமையினால் தற்கொலை செய்யப் போகின்றேன் என்று விரக்தியுடன் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்” என்று உறவினர்களினால் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு சடங்களையும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா, விசாரணைகளின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொழில் இழப்புகளால் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button