கொரோனாவை நினைத்து மனிதர்கள் புலம்பலாமா?
கொரோனாவை நினைத்து புலம்பும் மனிதர்கள் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். தனது வாழ்க்கையில் நடந்த அத்தனை கஷ்டங்களையும் கொரோனாவோடு முடிச்சுப்போட்டு புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே புலம்புபவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் வேலைபார்ப்பவர்கள் என்றால், எல்லா வேலையும் தன் தலையிலே விழுவதாக கூறி புலம்பியிருப்பார்கள். வீட்டிற்கு வந்தால், புதிய காரணங்களை கண்டுபிடித்து மனைவியிடமும், குழந்தைகளிடமும் புலம்புவது அவர்களது வழக்கமாக இருந்திருக்கும். இது ஆண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை இல்லை. புலம்புபவர்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள். முன்பெல்லாம் நடுத்தர வயதுக்கு பிறகு செயல்வேகம் குறைந்த நிலையில் இருப்பவர்களே புலம்பினார்கள். கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில் இருபது வயதுகள் கூட புலம்பலோடுதான் முழுபொழுதையும் கழிக்கின்றன.
பொதுவாக எப்போதுமே புலம்பும் ரகத்தினர் மன அழுத்தம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எதிலும் திருப்தியடையாதவர்களாகவும், ஏக்கங்கள் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் நிம்மதியிழந்து தவிப்பார்கள். புலம்புகிறவர்கள் நிம்மதியாக வாழ சில வழிமுறைகள் இருக்கின்றன.
எப்போதும் புலம்புகிறவர்கள் உடல் ஆரோக்கியம் குறைந்தவர்களாக இருப்பதுண்டு. அவர்கள் உடல்நலத்தை மேம்படுத்த உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சத்தான உணவை, அளவோடு, சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். அவர்கள் தூக்கத்திலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். நல்ல உணவும், போதுமான தூக்கமும் கிடைத்தால் மனதிற்கு பெருமளவு நிம்மதி கிடைத்துவிடும். புலம்பல் குறையும்.
புலம்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யலாம். அது உடலை மட்டுமல்ல, மனதையும் சரி செய்யும். யோகாசனம் செய்வதும் சிறந்தது. ஒரே வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்காதீர்கள். இடைவேளையை உருவாக்கி அந்த வேலையில் இருந்து சிறிது நேரம் விடுபட்டு, சிறிது தூரம் நடக்கலாம். பாட்டு கேட்கலாம். விளையாடலாம். இவை புலம்பலில் இருந்துவிடுபட உதவும்.
உங்கள் பிரச்சினைகளை மட்டுமே எப்போதும் நினைத்து வேதனைப்படாமல் மற்ற மனிதர்களையும் திரும்பிப் பாருங்கள். இந்த உலகம் மிக பெரியது. ஒவ்வொருவர் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கவனியுங்கள். உங்களுக்கான நல்ல பொழுதுபோக்கையும் கண்டுபிடியுங்கள். நம்பகமானவர்கள், தன்னம்பிக்கை தருகிறவர்களை பார்த்து பேசவேண்டும் என்று விரும்பினால் அவர்களைப் போய் பாருங்கள். சிரிப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்களோடு சேர்ந்து சிரித்து பேசுவது புலம்பலைக்குறைக்கும்.
கொரோனா மட்டுமல்ல எந்த நோய் வந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அது விடைபெற்றுவிடும். அதனால் எந்த கஷ்டமும் நிலையானதல்ல. யாருடைய வாழ்க்கையும் எப்போதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்காது. நினைத்துப்பார்க்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகள் ஏற்படும்போது அதையே நினைத்து வேதனைப்படாமல், உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைத்துப்பாருங்கள். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடி, உங்களையே நீங்கள் உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.