பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை!
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பினை சில தினங்களுக்குள் மேற்கொண்டு, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றைப் தயாரிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
நோய் பரவுவதை தடுக்கும் வகையில் செயற்படுவதும் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்வதும் மக்களின் கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு பிரவேசிப்போர், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் அட்டையைத் தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.