ஜப்பான் வளர்ந்த கதை!
உலகிற்கு ஏற்படக்கூடிய பல்வேறுவகையான பாரிய சவால்களினை அடிக்கடி எதிர்கொள்ளும் அசாதாரண சந்தர்ப்பம் கிட்டிய உலக பிரசித்தம் வாய்ந்த நாடுகளுள் ஜப்பானுக்கென பிரத்தியேக இடமுண்டு.
அணுகுண்டுத் தாக்கம், சுனாமி ஆழிப்பேரலை அழிவும், எதிர்பாராத புவியதிர்வுகள் என ஜப்பானை அச்சுறுத்திப்பார்க்காத எதிரிடைகளே இல்லை எனலாம்.
இன்று வரை உலகப் புறவுருவப் படத்திலிருந்து ஜப்பான் தேசத்தினை உருக்குலைத்துப்போடக்கூடியதொரு நிலைவந்தும் பிடிகொடுக்காது வேரூன்றி நின்று தமது ஒற்றுமையுடனான அயராத உழைப்பால் ஜப்பான் இன்று நம் மத்தியில் ஓர் உத்வேகமான வளர்முக நாடுகளுக்கினையாகத் திகழ்கின்றது.
இவர்களது அதிதுரித வளர்ச்சி ஏனைய அனைத்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரமாக மட்டுமல்லாது உந்துசக்தியாகவும் அமைகிறது. அவ்வாறு ஏனைய நாடுகள் ஜப்பானியரிடமிருந்து அணுவளவேனும் கற்றறிந்து கொள்ள விரும்புகின்ற சாதனைச் சூத்திரங்கள் இவையே.
ஆற்றல் – வெற்றியின் முதல் படி
ஆசாதாரண இக்கட்டான சூழல்களுக்கூடாக கடந்துவர நேரிட்டபோதும் சற்றும் தளராதவர்களாக முகத்தில் துணிவும் மனதில் திடசங்கற்பமும் கொண்டிருந்தார்கள். அணுகுண்டுத் தாக்கத்தினைத் துணிவுடன் எதிர்கொண்டு சாதகமாக்கி முயற்சியுடன் மேலெழுந்தனர்.
இவர்களது வியக்க வைக்கும் ஆற்றல்களினை மட்டுமல்லாது இவர்களது பொறுமை மற்றும் திடசங்கற்பத்தைக்கூட இயற்கை அனர்த்தங்களும் மனிதனால் எய்தப்பட்ட செயற்கை விளைவுகளும் பரிசோதித்துப் பார்க்கத்தான் செய்தன.
நேர முகாமைத்துவதை கடைப்பிடிப்பவர்கள் என்றும் தோற்றதில்லை
நேரம் தொடர்பான அவதானத்திலும் காலத்தினை புத்திசாதூர்யமாகவும் செயற்திறன் மிக்கதாக பயன்படுத்துவதனை கருத்திற்கொண்டு செயற்படுவதில் பிரசித்தம் பெற்ற நாடு ஜப்பான் ஆகும்.
அங்குள்ள இளைஞர் யுவதிகள் முதற்கொண்டு வயோதிபர்கள் வரை தம்முடன் எப்போதும் ஓர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் அடங்கிய நாட்குறிப்பொன்றினைப் பேணுவது வழக்கம்.
நாளாந்தம் மாதாந்தம் இடம்பெற வேண்டிய நிகழ்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் குறித்து வைப்பதுடன் நின்றுவிடாமல் அவை உரிய காலகட்டத்துக்குள் நிறைவேற்றி முடிக்கப்பட்டனவா என்பதனை மதிப்பிடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பர்.
வருடாந்த கணிப்பின்படி ஜப்பான் புகையிரதங்கள் தாமதிப்பதன் வருடாந்த சராசரி 7 செக்கன்களாக மட்டுமே இருக்குமாம். இது எம்மை வியப்பிற்குள்ளாக்குவதொன்றாக அமைந்தாலும் இந்நாட்டவரின் நேர முகாமைத்துவ வரைவிலக்கணத்திற்கு இது ஓர் சான்றாகும். ஓவ்வொரு நனோசெக்கன்களினையும் அவர்கள் தம்முடையதாக்கிட விழைகின்றனர்.
தனிமனிதனிலிருந்து தொடங்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு
நாட்டின் சட்டத்திட்டங்களினைச் சரியாகக் கடைப்பிடிப்பதிலும் அவற்றை மதிப்பதிலும் கௌரவப்படுத்துவதிலும் ஜப்பானியர் ஏனைய நாடுகளுடன் சவாலிடத் தயாராகவே உள்ளனர் எனலாம்.
அத்தகைய நாட்டுப் பற்றுடைய பிரஜைகளைக் கொண்டமைந்த நற்பேறுடைய நாடு ஜப்பான். பாதையிலும் சரி வாகனங்களிலும் சரி ஏனைய சமூக இடங்களிலும் விசேட தேவையுடையோருக்கு முதலிடம் வழங்குதல் பொது இடங்கள் எங்கேயும் குப்பைகளைக் கொட்டாதிருத்தல் போன்ற சில அடிப்படை உதாரணங்கள் இந்நாட்டவரின் உத்தமத்தைப் பிரதிபலிப்பதுடன் பிரஜைள் அனைவரிடமுமிருந்து கிடைக்கப்பெறும் கூட்டு ஒத்துழைப்பானது தேசத்தின் சுபீட்சத்தை கட்டியெழுப்புவதனையும் சான்று பகர்கின்றது.
நன்னடத்தையும் தாழ்மையும்
ஒவ்வொரு நாட்டவரிடமும் தம் நாட்டுக்கே உரிய பிரத்தியேக வரவேற்பு முறைகளைப் பின்பற்றுகின்றனர். அவ்வாறு ஜப்பானியரும் பிறரை தம் தலைறினைத் தாழ்த்தி குனிந்து வணக்கம் கூறும் பாங்கில் வரவேற்பர்.
அவர்கள் பிறருடன் கலந்துரையாடும் தொனியும் மிக இனிதானதாக இருக்கும். இவைமட்டுமல்ல அயலான்மீதான கரிசனை உதவி மனப்பான்மை போன்ற குணவியல்புகள் இந்நாட்டவரின் நன்னடத்தை மற்றும் அவர்களது தாழ்மையையும் வார்த்தைகளின் தேவையின்றியே விவரிக்கின்றன.
குறிப்பாக “வணக்கம்” “நன்றி” என்ற விலையுயர்ந்த இரு வார்த்தைகளும் இவர்களது தொட்டில் பழக்கம் எனலாம்.
பூச்சிய வழுக்களுடனான பேணுகை
அதி உச்ச வினைத்திறனையும் விளைதிறனையும் கொண்டு பூச்சிய வழுக்களுடன் திடமான நிர்ணய இலக்கினை அடைய வேண்டுமென்பது அனைத்து வணிக நிறுவனங்களினதும் உலக நாடுகளினதும் குறிக்கோளாக அமைந்திருக்கும்.
அனைவரையும் கொள்ளைகொள்ளும் இந்த கருப்பொருளே ஜப்பானியரின் நாளாந்த உற்பத்திச் செயற்பாடுகளின் தாரக மந்திரம் ஆகும். ஒரு வகையில் இந்நடைமுறையானது செயற்பாடுகளின்போதும் இடையூரற்றதாகவும் தொழிளாளர்களிடையே தொந்தரவற்ற ஒரு பின்பற்றல் முறையாக அனைவராலும் விருப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மனித உழைப்பும் இயந்திர உழைப்பும் ஒன்றையொன்று மேவாது சமாந்தரமாக செயற்பட்டு வருகின்றன. இம்முறை தொழிலாளர்களை சிறந்த வெளியீடுகளை வழங்கிட அவர்களை உந்தித் தள்ளுகின்றது.
எந்நிலை வரினும் அசராது எதிர்கொள்ள துணிந்து நில் என்பது வரலாறு இவர்களுக்கு கற்றுகடகொடுத்த கற்பித்துக் கொண்டிருக்கும் அனுபவப்பாடம் ஆகும்.
கட்டுரையாளர்: Book of Secret