முழு இலங்கையும் சிவப்பு வலயமாக அடையாளம் : மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாமென எச்சரிக்கை!!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை மட்டம் 4 என்பது முழு நாட்டையும் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்துவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது பிரதேச முடக்கங்களுக்கும் அப்பால் 90 வீதத்துக்கும் அதிகமான கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைவாக தற்போது நாம் எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ளோம். 4ஆவது எச்சரிக்கை மட்டம் என்பது முடக்கத்தை அண்மித்த நிலைமையாகும்.
அதாவது சன நடமாட்டம் 90 வீதத்திற்கேனும் கட்டுப்படத்தப்பட வேண்டும். திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதோடு மதுபானசாலைகள், களியாட்ட விடுதிகள் உள்ளிட்டவையும் மூடப்பட வேண்டும்.
இந்த 4ஆவது எச்சரிக்கை மட்டத்தில் நாடு முழுவதும் சிவப்பு வலயமாக காணப்படும். இவ்வாறான நிலையில் அத்தியாவசிய சேவைக்கு மாத்திமே நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். தொற்றுள்ள வலயமே சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அதற்கமைய தற்போது இலங்கையில் சமூகப் பரவல் காணப்படுகிறது என்று கருத முடியும். ஆரம்பத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை மாத்திரம் முடக்கும் வகையிலான பிரதேச முடக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆரம்பத்திலேயே பிரதேச முடக்கங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால் தற்போது முழு நாட்டையும் முடக்க வேண்டியேற்பட்டிருக்காது.
ஆனால் தற்போதைய நிலையில் பிரதேச முடக்கங்களும் பிரயோசனமற்றவை. கோவிட் தொற்று முகாமைத்துவம் தொடர்பில் நாட்டில் முதலாவது அலை ஏற்பட்ட போதே நாம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழிகாட்டி கோவையை சமர்ப்பித்திருக்கிறோம்.
தடுப்பூசி வழங்கல் தொடர்பிலும் தெளிவான வழிகாட்டியை சுகாதார அமைச்சுக்கு வழங்கியிருக்கின்றோம். இந்த வழிகாட்டி ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை தொடருமாயின் மாதத்திற்கு 5000 மரணங்கள் வரை பதிவாகக்கூடும். இந்த அபாயத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு 90 வீதத்திற்கும் அதிக சமூக இடைவெளியைப் பேண வேண்டும். நடமாட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
அண்மையில் பெயரளவில் மாத்திமே விதிக்கப்பட்டிருந்த நடமாட்ட கட்டுப்பாடுகளே நாட்டில் இவ்வாறானதொரு அபாய நிலைமை ஏற்படக் காரணமாகும்.
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 75 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 25 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் கடந்த மே மாதம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய ஆபத்தான குழுவினரை இனங்கண்டு தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும்.
ஆனால் சுகாதார அமைச்சு தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 90 சதவீதமான மரணங்கள் தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை.
சுகாதாரத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விட இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு தொற்று நோயியல் பிரிவினரால் அதிகளவு தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமையே தற்போதைய நெருக்ககடிகளுக்கான காணமாகும்.
எவ்வாறிருப்பினும் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மாத்திரமே தனியொரு தீர்வாக அமையும் என்று கருதுவது தவறாகும். தடுப்பூசி ஏற்றிக் கொள்வதோடு சுகாதார விதிமுறைகளையும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.