fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

‘டாட்டூ’ அழகா?… ஆபத்தா?

விலை உயர்ந்த சொகுசு காரை வெளியே நிறுத்திவிட்டு வேகமாக அந்த டாட்டூ சென்டருக்குள் நுழைந்த டீன்ஏஜ் பெண், ‘கல்லூரி யில் என் தோழிகள் பலர் உடலில் நிரந்தரமாக இருப்பதுபோன்ற டாட்டூகளை பொறித்திருக்கிறார்கள். எனக்கும் அதுபோல் ஒரு டாட்டூ பதிக்கவேண்டும்’ என்று சொல்ல, ‘அப்படின்னா அழகான குரங்கு உருவம் ஒன்றை உங்கள் முதுகில் பதித்துவிடலாமா?’ என்று டாட்டூ கலைஞர் சிரித்துக்கொண்டே கேட்க, ‘குரங்கா..?’ என்று முகத்தை அஷ்டகோணலாக்கினார், அந்த டீன்ஏஜ்.

‘நிரந்தரமாக உடலில் பதித்துக்கொள்ளும் டாட்டூக்கள் மரணம் வரை உங்கள் உடலுடனே இருக்கும்.

அதனால் முன்பின் யோசிக்காமல் ஏதாவது ஒன்றை பதியுங்கள் என்று கூறக்கூடாது. நன்றாக யோசித்து, காலம் முழுவதும் உங்கள் உடலில் இருக்க எது தகுதியானதோ அதை பொறியுங்கள்’ என்று அவர் விளக்கம் கொடுத்ததும், அவருக்கு நன்றி கூறிவிட்டு, ‘நான் நன்றாக யோசித்துவிட்டு இ்ன்னொரு நாள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாள், அந்த பெண். ஆமாம்.. அவை நிரந்தரமாக உடலில் தங்கி விடும். அழிக்கமுடியாது.

டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் தொடர்புடையதாக உடலில் செய்யப்படுவது, மெடிக்கோட்டட் டாட்டூஸ்.

அலர்ஜி ஏற்படுத்தும் மருந்தின் பெயர், கீமோதெரபி செய்யக்கூடிய இடம் போன்றவைகளை டாட்டூ செய்வார்கள். நோய் முற்றிப்போனவர்கள், தங்களை கருணைக்கொலை செய்யவேண்டும் என்பதற்கான வாசகங்களையும்- செயற்கை சுவாசத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை என்ற வாசகத்தையும் டாட்டூவாக பதிவு செய்து மரணத்தோடு தைரியமாக மல்லுக்கட்ட விரும்புகிறார்கள். புற்றுநோயால் மார்பகத்தை நீக்கவேண்டிய நிலைக்கு ஆளான பெண்கள் நினைவுக்காக, மார்பகம் இருந்த அதே இடத்தில் டாட்டூ செய்துகொள்வதுண்டு. ஆபரேஷனின் அடையாளங்களை மறைப்பதற்காக அந்த தழும்புகள் இருக்கும் இடத்தில் டாட்டூ செய்துகொள்பவர்களும் உண்டு.

காஸ்மெட்டிக் டாட்டூக்களை பெண்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதடுகளின் நிறத்தை மேம்படுத்துதல், புருவங்களை அடர்த்தியாக்குதல், உடலில் தேவைப்படும் இடத்தில் அழகுக்காக மரு அமைத்தல் போன்றவைகள்தான் காஸ்மெட்டிக் டாட்டூக்கள் எனப்படுகின்றன. இவை எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. எளிதானதும் அல்ல. கிட்டத்தட்ட ஒரு சிறிய ஆபரேஷன் செய்யும் அளவுக்கு இதற்கான தயாரெடுப்புகள் அவசியம்.

இந்த அழகுக்கலை மீது பலருக்கும் ஆசை இருந்தாலும் சிலர் இதனை தவிர்த்துத்தான் ஆகவேண்டும். தொற்றுவியாதி இருப்பவர்களும், அடிக்கடி சரும அலர்ஜி ஏற்படுகிறவர்களும் டாட்டூ பதித்துக்கொள்ளக்கூடாது. 18 வயதைக் கடந்தவர்கள் டாட்டூ செய்துகொள்ளலாம். அந்த நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்க சருமத்தை மரத்துப்போகச் செய்யும் விதத்தில் ஸ்பிரேயை பயன் படுத்துவார்கள்.

‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள். நீங்கள் நிதானமாக டாட்டூ பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்துகொண்டு அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். அதற்கு கீழ்கண்ட விஷயங்களும் உங்களுக்கு பலன்தரும்.

நிரந்தரமாகும் என்பது தெரியுமா?

நமது ஆரோக்கியமான உடலுக்கு எல்லாவிதமான காயங்களையும் ஆறவைக்கும் சக்தி உண்டு். டாட்டூ விஷயத்திலும் உடல் அதைதான் செய்கிறது. சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸ் பகுதியில் டாட்டூ ‘இங்க்’கை செலுத்துகிறது. பொதுவாக டெர்மிஸ் பகுதியில் ஏதாவது பொருள் உள்ளே செல்ல முயற்சித்தால் ரத்தத்தோடு சேர்த்து அதை டெர்மிஸ் வெளியேற்றிவிடும். ஆனால் டாட்டூ இங்கில் இருக்கும் அடிப்படையான தன்மைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பு உடலுக்கு இருப்பதால், டெர்மிஸ் அதை வெளியேற்றுவதில்லை. அதனால் அது உடலில் நிரந்தரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

சில நோய்கள் தாக்குவதை தெரிந்துவைத்திருக்கிறீர்களா?

ஊசியை உபயோகித்து டாட்டூ செய்யப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்காவிட்டால் சிலவிதமான நோய்கள் தாக்கக்கூடும். எச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் மற்றும் சில சரும நோய்கள் தாக்கலாம். ஊசி முறையாக சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இங்க் புதிதாக இருந்தாலும் இத்தகைய நோய்களின் தாக்கு தலில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு டாட்டூ செய்யும் ஆர்ட்டிஸ்ட் இதில் விழிப்புணர்வு பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால் இதை எல்லாம் வாடிக்கையாளரால் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வலியை தாங்க முடியுமா?

லேசான காயத்தையோ, வலியையோ நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஆளாக இருந்தால், டாட்டூவின் வலி உங்களை சற்று கஷ்டப்படுத்தும். மற்றவர்கள் வலி என்று சொன்னாலே துடித்துப்போகிறவர்கள், ரத்தத்தை பார்த்தால் நினைவிழப்பு ஏற்படும் என்று கருதுகிறவர்கள், நன்றாக யோசித்துவிட்டே டாட்டூ செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி குறைவாக இருந்தாலும், உருவத்தை பதிப்பதற்காக ஒரு நிமிடத்தில் 80 முதல் 150 தடவை வரை ஊசிகள் சருமத்தில் குத்தும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும். ஸ்பிரே செய்தாலும், டாட்டூ பதித்த பின்பு அதில் வலி இருக்கும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button