கண் மூடி நான் வாழவா?
நிஜங்களைவிட கனவுகள் சுகமானவை என்று பல நேரங்களில் தோன்றியதுண்டு. அதனாலேயே, அதிகம் கற்பனையில் வாழ்பவள் நான். ஒரு நாள் மர நிழலில் ஆழ்ந்த உறக்கம் என்னை ஆட்கொண்டது. கற்பனையா கனவா என்று இன்னும் புரியவில்லை, ஆனால் இதுவரை காணாத காட்சி அது.
பல வர்ண ரோஜாக்கள் பூத்துக்குழுங்க, பெயர் தெரியா ஏராளமான பூக்கள் என்னை பெயர் சொல்லி அழைத்தன, நிழல் தரும் மரங்களுக்கு பஞ்சமே இல்லை. இந்த அழகிய பூந்தோட்டத்து காவல்காரியாக நான் மாற மாட்டேனா என்ற ஓர் ஆசை வரவே , “இது கொஞ்சம் பேராசை போல் இருக்கிறதே” என்று என் மனமே என்னை கிண்டல் செய்ய உதட்டின் ஓரம் சிறு புன்னகையோடு நகர ஆரம்பித்தேன்.
பூக்களை கண்டு மயங்கிய நான், அடுத்தது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தோடு பார்த்த போது, என்ன ஆச்சரியம் பறவைகளின் மிகப்பெரிய சரணாலயமே அது என்பது போல ஏராளமான பறவைகளின் இசைக்கச்சேரி அரங்கேரிய வண்ணம் இருந்தது. தடை போட யாரும் இல்லை, சம்பாதித்துக் கொடுக்கவும் ஒருவரும் இல்லை. என் காட்டில் நானே ராஜா, நானே மந்திரி என்று சுதந்திரமாக பறந்து திரிந்த அந்த பறவைகளிடம் என்ன ஒரு ஒற்றுமை. சிறகடிக்கும் பட்சிகளில் இருந்து என் கண்ணை ஒரு கணம்கூட நகர்த்த முடியவில்லை. ஏன் அப்படி நடந்தது?
நான் முன்பு சொன்னது போலவே, நானே ராஜா, நானே மந்திரி என்று இருந்தாலும். ஒரு பறவை பறக்கும் போது இன்னொன்று அதனோடு பறந்தது, இன்னொன்று அதன் பின்னால் பறந்தது,இன்னொன்று சில நேரம் கழித்துப் பறந்தது. ஆனால் எந்த சந்தரப்பத்திலும் ஒன்றின் சிறகை இன்னொன்று தாக்கவில்லை.
ஒரு பறவை உயரத்தில் பறக்கும் போது, அதனை பார்த்து இன்னொனறு பொறாமை படவில்லை. தனக்கு கிடைத்த சுதந்திரத்தில் தனக்கும் தன் குடும்பத்திற்கு இறை தேடி பறக்கும் அவை, தன் நண்பனுக்கு நிறைய இறை கிடைத்ததை நினைத்து ஏங்கி ஏங்கி தன்னுடைய நேரத்தை வீணாக்காமல் தன் வாழ்விற்காக பறக்கிறது. இதை பார்க்கும் போதே எனக்குள் அளவில்லா மகிழ்ச்சி.
திடீரென, உறக்கத்தில் இருந்து விழித்த நான், உலகம் இவ்வளவு அழகாகவும் இருக்க முடியுமா என்று வியந்தேன். இதுவரை இந்த உலகின் அழகை கண்களால் காண முடியாமல் கற்பனையில் வாழும் மாற்றுத் திறனாளி நான். ஆனால், தினமும், தம்மோடு உடன் இருக்கும் மனிதர்கள் தனக்கு செய்யும் துரோகங்களை சொல்லி அழும் குரல்களை கேட்டு கேட்டு வளர்ந்த எனக்கு, உலகத்தை காண வேண்டும் என்ற ஆசை இருந்ததே இல்லை. ஆனால், பிறரின் சந்தோஷத்தையும் வெற்றியையும் கண்டு பொறாமை படாமல் வாழும் வாழ்க்கை இந்த உலகை மாற்ற முடியும் என்பதை இன்று நான் கண்ட காட்சியில் உணர்ந்துகொண்டேன். கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகள் போல் எம் எண்ணங்களை அடைத்து வைக்காமல், பறக்கும் பறவைகள் போல் பரந்த எண்ணத்தோடு பிறர் நலனில் இன்பம் காண்போம். பொறாமையை ஒதுக்கி வைத்துவிட்டு அன்பினால் உலகை ஆள்வோம்.
இவை எல்லாம் நிகழ்வதை நீங்கள் கண்களால் காணும் போது, நானும் அந்த மகிழ்சியோடு கண் மூடி வாழாவா???
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.