வாள் வெட்டால் துண்டாடப்பட்ட கையை வெற்றிகரமாக மீள இணைத்த மருத்துவர்கள்!
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி துண்டிக்கப்பட்ட ஒருவரின் கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன், மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் ஆகியோரின் கூட்டு சேவையினால் கை துண்டிக்கப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.30 முதல் 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 உந்துருளிகளில் வந்த அடையாளம் தெரியாத 14 பேர், வீடொன்றில் இருந்தவர்கள் மீது, வாள் மற்றும் பொல்லு என்பனவற்றால் தாக்கியுள்ளனர்.
அத்துடன், குறித்த வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், வீட்டுக்கும் தீ வைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஒருவரது கை துண்டிக்கப்பட்டதுடன் கடும் காயங்களுக்கு உள்ளான மேலும் 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த தாக்குதலை நடத்துவதற்காக 5 உந்துருளிகளில் பிரவேசித்த 14 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.