fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பிரசவத்துக்கு கிளம்பியாச்சா? அப்போ இதெல்லாம் மறக்காதீங்க!

கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதிநீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button