fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

7 மாத கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீற்றர் துாக்கிச் சென்ற கணவன்!

மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார்.

சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தனியின் கணவரான குமாரும் கொழுந்து பறிக்கும் தொழிலையே தனது வாழ்வாதாரமாக செய்து வந்தார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அந்த தொழிலுமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் விவரித்த குமார்,

“சம்பவ தினத்துக்கு முன்னைய தினமான 3 ஆம் திகதி வியாழக்கிழமை காலையில் இருந்து கடும் மழை பெய்தது. ஆற்று பெருக்கத்ததினால் மறுநாள் அதாவது சம்பவம் நடந்த 4 ஆம் திகதியன்று வீதிகள் எங்கும் பெரும் வெள்ளம் காணப்பட்டது.

7 மாத கர்ப்பிணித் தாயான சாந்தனியின் வயிற்றிலுள்ள சிசு இரண்டு நாட்களாக துடிக்காத காரணத்தால் எமது பகுதிக்கு பொறுப்பான ‘மிட் வைப்’ (குடும்ப நலத்தாதி) 5 மணித்தியாலங்களுக்குள் ஹினிதும வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கும்படி அறிவுறுத்தினார்.

வெள்ளம் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாததால், எனது மனைவியை தூக்கிக்கொண்டு செல்ல முற்பட்டேன். இது கஷ்டான காரியமென்றாலும், எப்படியாவது மனைவியை வைத்தியாலைக்கு அழைத்துச் சென்று எமக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றே எனது மனதில் ஓடியது.

மனைவியைத் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் சிலர் எமக்கு உதவினார்கள். எனக்கு களைப்பு ஏற்படும்போது, எனது நிலையறிந்து என் மனைவி சில தூரம் நடந்து வந்தார். எனினும், அவள் களைப்படைந்து காணப்படும்போது நான் மீண்டும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலை நோக்கி நடந்து ஒருவாறு ஹினிதும வைத்தியசாலையை அடைந்தேன்” என்றார்.

வைத்தியசாலைச்குச் சென்ற குமாருக்கும் சாந்தனிக்கும் ஹினிதும வைத்திசாலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், “இவருக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வசதிகள் எமது வைத்தியசாலையில் இல்லை.உடனடியாக உடுகம வைத்திசாலைக்கு அனுமதிக்குமாறு” அங்குள்ள தாதியொருவர் கூறியமையே ஆகும். மேலும், “நீங்கள் எவ்வாறு செல்வீர்கள். வீதியெங்கும் வெள்ள நீர் காணப்படுவதால் வாகனமொன்றைக்கூட கொடுக்க முடியாதுள்ளது ” என அந்த தாதி கூறியுள்ளார்.

ஹினிதும வைத்தியசாலையிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் உடுகம வைத்தியசாலை உள்ளது. தனது தைரியத்தை கைவிடாது நம்பிக்கையுடன் உடுகம வைத்தியசாலை நோக்கி மீண்டும் தனது மனைவியை தூக்கிக் கொண்டு நடந்து சென்றார் குமார்.

“ஹினிதும கல்வாரி தேவாலயத்தை நெருங்கிக்கொண்டிருந்வேளையில், அந்த பகுதியால் வந்த ஷெஹான் மாலக்க கமகே என்பவர் எமக்கு உதவிசெய்தார். அவர் எங்களை படம்பிடித்து எமது நிலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்தார். இதன்பின்னர் , நான் எனது மனைவியைத் மீண்டும் தூக்கிக்கொண்டு உடுகம வைத்திசாலையை நோக்கிச் சென்றேன். இடையில் களைப்பாகும் போது எனது மனைவி இறங்கி நடந்து வந்தார். இவ்வாறு சற்று ஓய்வெடுத்துக்கொண்டு ஹினிதுமயிலிருந்து உடுகம வைத்தியசாலைக்கு சென்றோம் ” என்றார்.

தனது நிலை குறித்து கூறிய கர்ப்பிணித்தாயான சாந்தனிக்கு, உடுகம வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அவருக்குத் தேவையான முதலுதவி வசதிகளை வழங்கி உடனடியாக அவரை காலி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பினார்கள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக கடைகள் எதுவும் திறந்தில்லாததால் மனைவி சாந்தனியை காலி வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு வீடு நோக்கி மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்டார் குமார். இவ்வாறு இரவுப் பொழுது நெருங்கிக் கொண்டிருக்கையில், அவ்வழியாக வந்த பொலிஸ் வண்டி இவர் அருகே நிறுத்தி வினவினர்.

இதன்போது தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கூறியதுடன், பொலிஸ் வண்டியிலிருந்த இளம் பொலிஸார்கள் சிலர் அந்த சம்பவம் தொடர்பில் நாம் பேஸ்புக் மூலாக அறிந்திருந்தோம் எனவும், அந்த சம்பவம் உங்களுடையதா எனவும் கேட்டிருந்தனர். அதற்கு ‘ஆம்’ என மறுமொழியளித்த குமாரிடம், அருகிலுள்ள கட்டடத்தை காட்டி இங்கே யாருமில்லை. இங்கே நீங்கள் தங்கிவிட்டு காலையில் செல்லவும் என்றதுடன், அவருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு பொலிஸார் நகர்ந்தனர்.

அந்த கட்டத்தில் தங்கிவிட்டு, பின்னர் விடிந்ததும் தனது வீடு நோக்கி சென்றார் குமார். வீடு சென்று குளித்துவிட்டு , புத்துணர்ச்சியுடன் கொடிகந்த கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து 35 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காலி வைத்தியசாலை நோக்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். பேஸ்புக் மூலாக இவரின் நிலை அறிந்த சிலர் இவருக்கு மனமுவந்து உதவி நல்கினர்.

நடந்து சென்றிருக்கையில், இவரை வாகனத்தில் ஏற்றிச்சென்றாலும் பாதையெங்கும் வெள்ள நீர் காணப்பட்டதால் தொடர்ந்தும் வாகனத்தால் பயணிக்க முடியவில்லை. இதனால், மீண்டும் தனது நடைப்பயணத்தை தொடர்ந்த குமார் வைத்தியசாலைக்குச் சென்றதும் அவருக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

சாந்தனியை பரிசோதித்த வைத்தியர்கள், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வயிற்றிலுள்ள சிசுவும் நலமாக இருப்பதாகவும் கர்ப்பிணித்தாய் 8 ஆவது மாதம் நிரம்பியவுடன், வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்க்கும்படியும் வைத்தியர்கள் தெரிவிக்க மகிழ்ச்சியில் வீடு நோக்கித் திரும்பினார் குமார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button