தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான பதிவுகள் நீக்கம்! பேஸ்புக் விளக்கம்!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை போர் குறித்த பதிவுகளை பேஸ் புக் எனப்படும் முகநூல் நீக்கி வருவதாக பரவலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக தடைகள் விதிக்கப்படுவதாகவும் முகநூல் பயனீட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் மறைந்த பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகளையும் இலங்கை உள்நாட்டு போர் தொடர்புடைய சில பதிவுகளையும் பேஸ் புக் தொடர்ந்து நீக்கி வருவதோடு அவற்றை பதிவிட்டவர்கள் மீது தாற்காலிக கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டபோது பலர் பிரபாகரன் குறித்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை தங்களது முகநூலில் பதிவிட்டிருந்தனர். எனினும் இந்த பதிவுகளையும் புகைப்படத்தையும் முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது என கனடா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த முகநூல் பயனீட்டாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளியிட்டனர்.
இதனிடையே பிரபாகரன் குறித்த பதிவுகளை தடுப்பது ஏன் என பேஸ்புக் விளக்கம் அளித்திருப்பதாகவும் பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் முக்கியமான கலாச்சார, சமுக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முகநூலுக்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும் வெளிப்படையான வன்முறை திட்டத்தை அறிவித்த நபர்கள், வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனி நபர்களை பாராட்டும் மற்றும் வன்முறைகளை ஆதரிக்கும் பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி வரும் என பேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
வெறுப்பையும் வன்முறையையும் பரப்பும் வகையில் தங்களது தளம் பயன்படுத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என் பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதோடு வெறுப்பை தூண்டும் அமைப்புகளை பட்டியலிடுவதற்காக நாங்கள் ஒரு செயல்முறை திட்டத்தை பின்பற்றி வருகிறோம். இந்த செயல்முறை சரியான முறையில் பின்பற்றப்படுவதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வியாளர் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
மக்களுக்கு எதிரான வன்முறைக்கு தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தாலும் அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டாலும் அவற்றுக்கும் தடைவிதிக்கப்படும் என்றும் அது கூறியது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.