திடீர் பணக்கார யோகம் யாருக்கு அமையும்?
இன்றைய உலகில் பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகிவிட்டது பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இன்றைய சூழ்நிலையாகும். பணம் என்பது குறிப்பிட்ட சிலருக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. குறிப்பிட்டு பார்த்தால் பலருக்கு அவ்வளவு எளிதில் பண வரவு ஏற்படுவதில்லை. ஜோதிட ரீதியாக யாருக்கு எளிதில் பணம் கிடைக்கிறது? திடீர் பணக்காரனாகும் யோகம் யாருக்கு உண்டாகும் என்பதனை பற்றி இங்கு தெள்ளத் தெளிவாக பார்ப்போம்.
பொதுவாக பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். ஜெனன ஜாதகம் சாதகமாக இருபபது மட்டுமின்றி கோட்சார கிரக சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் தான் பண வரவு சிறப்பாக இருக்கும். அதைவிட மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒரு ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமில்லை யோகத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் தசா புக்தி நடக்க வேண்டும். தசா புக்தி நடப்பது கூட முக்கியமில்லை. அந்த தசா புக்தி பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கக் கூடிய தசா புக்தியாக இருக்க வேண்டும். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜனன ஜாதகமும் தன யோகமும்ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தனஸ்தானமாகும். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11ம் வீடு லாப ஸ்தானமாகும். பொதுவாக வீடு வாகன யோகத்தையும் அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழி வகுக்கக் கூடிய ஸ்தானமாக 4ம் வீடு அமைகிறது. அதுபோல 5ம் வீடு பலம் பெற்றிருந்தால் பூர்வ புண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடைய முடியும். நவகிரகங்களில் தன காரகன் என வர்ணிக்கப்படக் கூடியவர் குரு பகவானாவார். குரு ஒருவர் ஜாதகத்தில் பலமாக அமையப் பெற்றால் பொருளாதார மேன்மைகள் எளிதில் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் மேற்கூறியவாறு 2, 9, 10, 11 ஆகிய பாங்கள் பலம் பெறுவது முக்கியம். அதுமட்டுமின்றி இவர்கள் 6, 8, 12ல் மறையாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
2, 9, 10, 11க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், ஆட்சி பெற்று பலமாக அமைவதும் வலிமையான தன யோகத்தை உண்டாக்கும். குறிப்பாக 4, 7, 10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். 1, 5, 9 ஆகிய ஸ்தானங்கள் திரிகோண ஸ்தானங்களாகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணாதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தாலும் எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான ஏற்றத்தினை அடைய முடியும்.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சமுதாயத்தில் சொல்லக் கூடிய அளவிற்கு ஏற்றம் உயர்வினை என்றாவது ஒருநாள் கண்டிப்பாக அடைவார்கள். 4ம் அதிபதி பலமாக அமையப் பெற்றால் கிடைத்த பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும்.
அதுபோல ஒருவர் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் பெறுகிறதோ அந்த பாவத்தின் வழியில் தாராளமான பணத்தினை அடைய நேரிடும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 9ம் பாவம் பலம் பெற்றிருந்தால் தந்தை மூலமாகவும் 7ம் பாவம் பலம் பெற்றால் மனைவி மற்றும் கூட்டுத் தொழில் மூலமாகவும், 4ம் பாவம் பலம் பெற்றால் தாய் வழியிலும் 3, 11ம் பாவங்களும் செவ்வாயும் பலம் பெற்றால் உடன்பிறந்தவர்கள் மூலமும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருளாதார மேன்மைகளையும் அடைய முடியும்.
கோட்சாரமும் தன யோகம்கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு பகவான் 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் போது பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதுபோல ஒரு ராசியில் அதிககாலம் தங்கும் சனி பகவான் 3, 6, 11, ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்கின்ற போது பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகிறது.
தசா புக்தியும் தன யோகமும்ஒருவர் சம்பாதித்து அத்தியாவசிய செலவுகள் செய்வதென்பது தனயோகமாக கருத முடியாது. சம்பாதிப்பென்பது அவர்களது அத்தியாவசிய செலவுகளுக்கு அப்பாற்பட்டு அபரிமிதமாக அதிகப்படியாக சேரும் பணமே தன யோகமாகும். அப்படிப்பட்ட சேர்க்கையானது தசா புக்தி மிகவும் சாதகமாக இருக்கின்ற காலத்தில் தான் ஏற்படுகிறது.
குறிப்பாக எதிர்பாராத விதத்தில் தன யோகத்தை அடைய வைக்க தசா புக்தி ரீதியாக சில கிரகங்கள் தான் மிகவும் உதவியாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய திசைகள் தான் எதிர்பாராத யோகத்தினை உண்டாக்குகிறார்கள். குறிப்பாக சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது ஆகிய திசைகள் நடக்கின்ற போது தன வருவாய் ஆனது ஒரு சீரான தாக இருக்கின்றது அதுமட்டுமின்றி நேர்மையான வழியிலும் நல்வழியிலும் பல பொது காரியங்கள் செய்வதற்கும் வழி வகுக்கும், திசையாகவே விளங்குகிறது. ஆனால், ஒருவருக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுக்கிரன், புதன், சனி ராகு ஆகிய நான்கு கிரகங்கள் அமையப் பெற்று அந்த திசையானது நடைமுறையில் நடைபெற்றால் திடீர் செல்வந்தராகக் கூடிய அமைப்பினை உண்டாக்குகிறது. பொதுவாக 3வது திசை பெரிய யோகத்தினை ஏற்படுத்துவதில்லை.
உதாரணமாக சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக சுக்கிர திசையாக வருவதால் சுக்கிரன் பலம் பெற்றுவிட்டால் எதிர்பாராத தன யோகத்தினை சுக்கிர திசையில் அடைய முடியும்.
அதுபோல புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை 3வது திசை என்பதால் பெரிய யோகத்தினை ஏற்படுத்த இடையூறுகள் உண்டாகும்.சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை 3வது திசையாக வருவதால் அனுகூலத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே சனி பலம்பெற்றிருந்தால் காலம் கடந்து வர கூடிய சனி திசை பெரிய அளவில் யோகத்தினை உண்டாக்குகிறது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.