முயல்- ஆமை கதை!
எப்போதும் தற்பெருமை பேசுபவர்கள், யாருடன் அவ்வாறு பேசுகிறார்கள் என்று சற்று உற்றுக் கவனித்தால் பெரும்பாலும் தமக்கு கீழே பணிபுரிபவர்கள், கடைநிலை ஊழியர்கள், நலிந்தவர்கள், வலுவற்றவர்கள் என அந்த லிஸ்ட் அப்படியே தொடர்ந்து செல்லும். காரணம் பலவீனமானவனிடமே தமது பலத்தைக் காண்பிக்க முடியும் என்பது இவ்வாறான தற்பெருமைசாலிகளின் நம்பிக்கையாகும்.
எப்பொழுதும் சிறுவர்கள் வீதியில் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் பலவீனமான நாய்க்கு கல்லெறிவார்கள் ஏனென்றால் அந் நாயால் திருப்பிக் கடிக்கக் கூட பெலன் இருக்காது. தற்புகழ்ச்சிக்காரனின் பெரும்பாலான கதைகள் வெடியாகவே இருப்பது வழமையாகும், இவ் அனுபவம் எம்மில் பலருக்கு இருக்கும்.
தம்மை ஒரு சுப்பர் ஹீரோ போன்று அல்லது திரைப்படக் கதாநாயகன் போன்று எண்ணிக்கொண்டு அவ்வாறு தம்மைப் பற்றி அடித்து விடுவார்கள். அவர்கள் போடும் சில வெடிகள் நாம் ஏற்கனவே பார்த்த திரைப்படங்களைக்கூட ஞாபகப்படுத்தியிருக்கும்.
அவ்வாறே அன்றொரு மாலைப்பொழுதில் ஆமையும் முயலும் சந்தோசமாக வாப்பா கடையில் சூப் குடித்துக் கொண்டிருந்தபோது முயல் திடீரென்று கேட்டது; ஆமைக்கும் தனக்கும் இடையே ஒரு ஓட்டப்போட்டி வைப்போம் என்றும் முடிந்தால் ஆமையைக் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறுமாறு சவால் விட்டது.
சூப்பின் காரமும் முயலின் சவாலும் ஆமையை உசுப்பி விட்டது. உண்மையில் ஆமையால் முயலோடு போட்டி போடமுடியாது, ஆனால் முயலின் தற்பெருமை ஆமையின் தன்மானத்தை சீண்டிவிட்டது. முயலின் வெடிக்கதைகளை கேட்டு அலுத்துப்போன ஆமை ஏன் தன்னால் முயலுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடியாது என்று தன்னைத்தானே கேட்டுப்பார்த்து தனது மனச்சாட்சியின் பதிலுக்கு காத்திராமல் உடனே போட்டிக்கு வருகிறேன், சவாலுக்கு தயார் என்று சொன்னது.
தற்புகழ்ச்சிக்காரர்கள் பல சவால்களை மற்றவர்களுக்கு விடுவார்கள். சில நேரம் மற்றவர்களின் இயலாமையை தமது பலமாகக் காட்டிக்கொள்வார்கள் அல்லது அவர்கள் ஏற்கனவே குறித்த விடயத்தில் திறமைகொண்டவர்களாயிருப்பர். அதாவது அவர்கள் உடற்பருமன் கூடியவர்களை(அவர்களை நாம் குண்டர் என அழைப்பதுண்டு) கிலோமீற்றர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பார்கள்.இது குண்டர்களை அவமானப்படுத்துவதோடு அவர்களை கேலிக்குள்ளாக்கும் ஒரு செயற்பாடகவே இருக்கும்.
இவ்வாறு தமது சவால்களை இயலாதவர்களிடம் காட்டுவது அவர்களின் தனிச்சிறப்பாக்கும். அவ்வாறு இயலாதவர்கள் அல்லது பலவீனர்கள் இவ்வாறனவர்களின் பேச்சைக் கேட்டு சில நேரம் கோபம் அடைவார்கள் ஆனால் அவர்களின் நிலைமை அவர்களை அடக்கிவிடும் மேலும் தற்புகழ்ச்சிக்காரர்களின் அதிகார, பண பலம் போன்றவை பலவீனர்களை முழுமையாகக் கூட முடக்கிவிடும். எனவே சொல்வதைக் கேட்டு அமைதலாயிருப்பார்கள்.
ஆனால் முயலின் பேச்சைக்கேட்ட ஆமை மிகவும் கோபம் அடைந்தது, முயலின் சவால் ஆமையின் தன்மானத்தை சீண்டிவிட்டது. எப்போதும் ஒருவனின் தன்மானம் சீண்டப்படும் போது அது அதிக கோபத்தையும் தன்னை மற்றவனிடம் நிருபிக்க வேண்டிய வைராக்கியத்தையும் அவனுக்கு ஏற்படுத்தும். ஆமையால் வேகமாக ஓட முடியாது என்று தெரிந்துதான் முயல் ஆமையை தன்னோடு போட்டிக்கு கூப்பிடுகின்றது.
ஆமைக்கு ஏற்பட்ட ரோஷம் என்பது ஆமையின் நிலைமையிலிருக்கும் அனைவருக்கும் ஏற்படக்கூடியது ஆனால் முயலுக்கான பாடம் ஆமை மூலமே கற்பிக்கப்படவேண்டும் என்பது கர்மா, அதை ஆமை நிருபிக்க முடிவு செய்து முயலுடன் போட்டிக்குத் தயாரானது.
கடலின் அமைதிக்குப் பின்னர் இருந்த சீற்றமும் அதன் விளைவையும் நாம் சுனாமி என்ற கோரத்தாண்டவம் மூலம் பார்த்திருப்போம். பலவீனமானவனின் அமைதியான மனநிலை என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம். அவன் முன்னர் அதிக கோபக்காரனாயிருந்து தற்போது திருந்தியிருக்கலாம். எப்போதும் ஒருவனின் தற்புகழ்ச்சி என்பது மற்றவனை கோபப்படுத்தும் என்பது நாம் அனுபவம் மூலம் கற்ற பாடமாகும்.
ஒருவன் தற்பெருமை பாடும்போது அது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரியும் என்பதோடு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் பலவீனனை சீண்டும் போது அவனுடைய உணர்ச்சி வெளிப்பாடு மிகவும் பயங்கரமாக இருக்கும். அவனுடைய மனதிலிருக்கும் வலியை மீண்டும் தூண்டிவிடுவது போலிருக்கும், மறந்துபோன ஞாபகங்கள் மீண்டும் மனதுக்குள் தோன்றும். தன்னுடைய தோல்வியை கேலிப்படுத்துவதாக அமையும் போது பலவீனனின் எதிர்வினை என்பது அவனோடு சீண்டுபவனுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கத் தவறாது.
சவாலை ஏற்றுக்கொண்ட முயலும் ஆமையும் போட்டிக்குத் தயாராகினர். அதற்கு நடுவராக அந்த சூப் கடைக்காரனே முன்வந்தான். ஏனெனில் ஆமைக்கும் முயலுக்கும் நடக்கும் போட்டி மூலம் தனது கடைக்கான விளம்பரத்தைத் தேட முற்பட்டான்.
அவனுக்கு ஆமையும் பலவீனமும் முயலின் பலமும் ஒரு பொருட்டல்ல, மாறாக இவர்களுக்கான போட்டியில் தான் லாபம் அடைவது அவனுடைய நோக்கமாயிருந்தது. எனவே போட்டி தொடங்கி முயல் மிகப்பெரிய தூரத்தை ஆமைக்கிடையே வைத்தது.
தற்பெருமைக்காரனுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனில் பலவீனமானவன் எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்கமாட்டான். இதில் கொடுமையான விசயம் என்னவெனில் இவர்களுக்கிடையே சமசரம் செய்ய ஒருவர் வருவார், அவருடைய மனநிலையைப் பார்த்தால் இவர்கள் இருவரிடமும் நல்ல பெயரை வாங்கி தனது பெயரை நிலைநாட்டுவதோடு இருவரின் சண்டையில் குளிர்காய்வார்.
தான் ஒரு பெரிய மனிதன் என்ற நினைப்போடு தீர்ப்பு சொல்லக் கிளம்பிவிடுவார். தன்னுடைய அடையாளத்தை உறுதிப்படுத்தவும் சமூகத்தில் தான் ஒரு பெரிய மனிதர் என்று காட்டவும் இவ்வாறான பிரச்சினைகள் அவருக்கு தேவையாக இருக்கும். நீதி என்பதைத் தாண்டி தன்னுடைய பெயருக்கான மார்க்கெட்டிங் அவருடைய இலக்காக இருக்கும்.
அதிக தூரத்தைக் கடந்து வந்த முயல் சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பி அது தற்பெருமைக் கனவோடு நன்கு தூங்கிவிட்டது. ஆனால் ஆமையோ விடாப்பிடியான ரோசம் காரணமாக களைத்தாலும் தன்னால் முடிந்தளவு வேகமாக வந்து கொண்டிருந்தது.இடையில் ஆமையின் அம்மா திரும்பி வருமாறு போட்ட மெசேஜ்ஜைக்கூட கணக்கில் எடுக்காமல் போனை ஓவ் செய்து விட்டது.
ஆமை வேகமாக முயல் நித்திரை செய்து கொண்டிருந்த இடத்தை கடந்து போட்டி முடிவடையும் இடத்தைக் கடந்து வெற்றிக்கோப்பையைக் கூட வாங்காமல் ஒரு சிரிப்புடன் வீடு சென்றது. நடுவராக நின்ற கடைக்காரருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அதே நேரம் தூக்கம் கலைந்து சோம்பல் முறித்த முயல் இன்னும் ஆமை தன்னைக் கடக்கவில்லை என்ற நினைப்புடன் முன்னேறி இறுதி இடத்துக்கு வந்தபோது போட்டியே முடிவடைந்திருந்தது.
முயலுக்கு பெருத்த அவமானம், அதனுடைய முகம் கருங்கல்லாகியது. ரோட்டில் சென்ற அனைவரும் எள்ளி நகையாடினர். மிகப்பெரிய நோண்டியுடன் வீடு சென்ற முயல் வெளியில் எட்டிப்பார்ப்பதேயில்லை. ஆமையின் முன்னைய மனநிலை இப்போது முயலுக்கு ஏற்பட்டது.
பலவீனமானவனின் உண்மையான போராட்டம், கடின முயற்சி, விடாப்பிடியான தன்னம்பிக்கை போன்ற அவனை எப்போதும் வெற்றியடையச் செய்யும். ஏனெனில் இழப்பதற்கு எதுவும் இல்லாத போது எதையும் தைரியமாக முன்னெடுக்கும் குணம் அவனுக்கு இருக்கும்.
ஆனால் தற்பெருமைக்காரனின் தோல்வி என்பது அவனை முழுமையாக முடக்கி வெட்கித் தலைகுனிந்து கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி வாழ்க்கையே வெறுத்துப்போவான். சில பாடங்கள் கடினமான முறையில் கற்கும் போது அதன் அனுபவம் சாகும் வரை இருக்கும். எனவே பலவீனர்கள் என எண்ணும் போது உங்கள் மனதிற்குள் இருக்கும் வைராக்கியத்தையும் ரோசத்தையும் தட்டிவிடுங்கள்.
அது உங்களுக்கான வேட்கையை உருவாக்கும், உங்களுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்தும்.பலமுள்ளவர்களோடு நாம் வலிந்து என்றுமே எந்த சம்பவங்களுக்கும் செல்வதில்லை ஆனால் எமது தன்மானமும் ரோசமும் எப்போது சீண்டப்படுகின்றதோ அன்று நாம் யார் என்று நிரூபிக்க வேண்டியுள்ளது. எமக்கான நியாயத்தையும் நிலையையும் நாமே தேடிக்கொள்ள வேண்டும்.
உலகத்தில் பலவீனமானவன் இருப்பதே பலமுள்ளவன்,கர்வமுள்ளவன் மற்றும் தற்பெருமைக்காரனை வெட்கப்பண்ணும் படியாகவே என்பதை நாம் மறத்தலாகாது.இது கடந்த 21 நூற்றாண்டுகளாக நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.
கட்டுரை ஆசிரியர் – Paul
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்