தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் அரசியல்!
எமது நாட்டைப் பொறுத்தவரையில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி அல்லது வருகை என்பது அதிகமாகக் காணப்பட்டது.
நீண்டகால யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் பல சர்வதேச தொண்டுநிறுவனங்களின் வருகைக்கும் புதிய உள்நாட்டு தன்னார்வுத்தொண்டு நிறுவனங்களின் தோற்றத்துக்கும் வழிவகுத்தன.
குறிப்பிட்டுச் சொல்லப்போனால் இத்தகைய நிறுவனங்களின் வருகையானது எமது மக்களின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு காரணமாயிருந்ததோடு அரசாங்கத்தின் பெரும் சுமைகளையும் இலகுவாக்கின.இருப்பினும் தற்போதைய சூழலில் தொண்டு நிறுவனங்களின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நாட்டின் தற்போதைய சூழல்,அரசியல் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றம்,குறைந்தளவான தேவைகள் போன்றவை தொண்டுநிறுவனங்களின் பரபரப்பைக் குறைத்துள்ளன.
எது எவ்வாறாகவிருப்பினும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்களின் எக்ஸ்றே என்பது பலருக்குத் தெரியாததொன்று.எமக்குத் தெரிந்த பலர் தொண்டுநிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
அதிலும் சர்வதேசம்,உள்நாடு என பிரிவினைகள் உண்டு, மன்னிக்கவும்! பிரிவுகள் உண்டு.
நிறுவனங்களின் மொத்த பட்ஜெட், நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்கள், நிதி வழங்கும் நாடுகள், பணியாளர்களின் ஊதியங்கள், ஊழியர்களின் கல்வித்தகைமை, ஆங்கில மொழி அல்லது மொழித்தகைமை போன்றன தொண்டுநிறுவனங்களின் மதிப்புத்தன்மையை தீர்மானிக்கின்றன.
அரச நிறுவனங்களில் கூட நிறுவனங்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மை,அங்கீகாரம் என்பனவும் மேற்கூறிய அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது ஒரு இக்கட்டான நிலைப்பாடாகும்.
ஒரு நிறுவனம் தன்னுடைய செயற்றிட்டத்தை அமுல்படுத்த வேண்டுமாயின் அதன் இலக்குக்குழுக்கள் பெரும்பாலும் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களாக,நலிவுற்றவர்கள்,சமூகத்தால்ஒதுக்கப்பட்டவர்கள்,சிறுவர்களாக இருப்பர்.
ஏனெனில் அவ்வாறான மக்களின் அவலநிலையை போக்கும் செயற்றிட்டங்கள்,அவர்கள் வாழ்க்கை முறையை மாற்றும் செயற்பாடுகள் கொடையாளர்களை பெரிதும் கவரக்கூடிய எண்ணக்கருக்கள் ஆகும்.
இதில் மேற்படி இலக்குக்குழுக்களின் வாழ்க்கையில் ஏதோவொரு சாதகமான மாற்றம் ஏற்பட்டால் அது செயற்றிட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.
ஆனால் உண்மையிலே இதுதான் நடக்கின்றதா என்றால் அது ஒரு கேள்வியாகவே இருக்கும்.இவ்வாறான செயற்றிட்டங்களின் முடிவு எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தியதா இல்லையா என்பதற்கு அதன் பயனாளிகளே சான்று பகரும்.
பெரும்பாலான நேரங்களில் ஒரு திட்டம் தோல்வியடையும் போது அதன் பெரும்பாலான பழி பயனாளிகளின் மேலே அல்லது குறிப்பிட்ட கள உத்தியோகத்தர் மீது போடப்படுவது சாதாரணமானதொன்றாகும். பெரும்பாலான நேரங்களில் அரச கொள்கைகளை விமர்சிப்பது என்பது செயற்றிட்டத்தின் தோல்வியை அல்லது தவறான திட்டமிடலை சமாளிப்பதற்கு பயன்படுகின்றது.
சில வேளைகளில் நிறுவனத் தலைவர்கள் தமது செல்வாக்குகள் மூலம் செயற்றிட்ட அனுமதியைப் பெறுகின்ற சந்தர்ப்பங்களுமுண்டு.
ஒரு செயற்றிட்டம் வரையப்படும் போது அதற்கான பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படும்.ஏனெனில் இவ் பட்ஜெட், திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை செய்து முடிப்பதற்கான செலவுகள்,அதற்கான ஆளணியினர்கள் உத்தியோகத்தர்கள்,அவர்களின் சம்பளங்கள்,நிறுவனத்தலைவருக்கான சலுகைகள்,இதர பொருட்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும்.
பொதுவாக செயற்றிட்டத்தின் மொத்த செலவுகளில் 60% பயனாளிகளின் முன்னேற்றத்துக்கும் மீதி நிர்வாக செலவுகளுக்கும் ஒதுக்கப்படும்.ஆனால் நடைமுறையில் இது தலைகீழாகவே இருப்பதோடு மக்கள் நலன் என்பது குறைவாகவே உள்ளது.
சில தொண்டுநிறுவனங்களின் செயற்பாடுகள் வியாபாரக் கம்பனி போல செயற்படுகின்றன.அங்கே முடிவுகள் நிறுவனத்தலைவராலேயே எடுக்கப்படுகின்றன.பணியாளர்களின் மனநிலை மிக மோசமான நிலைமைகளில் இருக்கும்.
பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் தமது செயற்பாட்டு செலவுகளை குறைப்பதற்காக உள்நாட்டவரை தமது பிரநிதியாக நியமிப்பர்.அவ்வாறு நியமிக்கும் போது ஏராளமான சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.அப்போது மக்கள் நலன் வெறும் போலிப்பொருளாகவும் சுயநலம் மேலோங்கியும் இருக்கும்.
ஏனெனில் கேள்வி கேட்கும் பதவிகளில் நன்கு தெரிந்தவர்களோ அல்லது போதிய கல்வித்தகைமை இல்லாதவர்களோ அல்லது தமக்கு நன்கு பக்கவாத்தியம் போடுபவர்களே இருப்பர்.
அவ்வாறு இருக்கும் போது ஊழல் மற்றும் பணம் முறையற்ற விதத்தில் செலவளிக்கப்படல் போன்றவை தடுக்கமுடியாது.தமக்கு எதிரானவர்கள்,தம்மைக் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் நீண்டநாட்கள் தாக்குப்பிடிக்கமாட்டார்கள்.
தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் நடத்தைகளை அடுத்த தொடரில் பார்ப்போம்.
கட்டுரை ஆசிரியர் – Paul
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்