கைத்தொலைபேசியின் குமுறல் – ஒரு பக்க கதை
“நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடாத ஒரே விடயம் போனுக்கு சார்ஜ் போடுவது தான்” முகப்புத்தகத்தில் இந்த மீம்ஸை பார்த்து சிரித்தபடி என் கைத்தொலைபேசியை சார்ஜில் போட்டு மேசையில் வைத்துவிட்டு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தேன்.
திடீரென ஒரு சிரிப்புச் சத்தம், சுற்றும் முற்றும் பார்த்தேன் ஒருவரும் இல்லை, திரும்பி மேசையை பார்த்தால் என்னுடைய கைத்தொலைபேசி என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தது. ஒன்றும் புரியாதவளாய் “ஏன் என்னைப் பார்த்து சிரிக்கின்றாய்” என்று கேட்டேன். அப்போது அது என்னைப் பார்த்து, “கொஞ்ச நேரம் என்னை மேசைமேல் வைத்துவிட்டு எதையோ பறிகொடுத்தது போல் இப்படி அமர்ந்திருப்பது ஏன்? என்னை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் படும்பாட்டை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
காலையில் எழுந்தவுடன் கண் விழித்ததற்கு நன்றி சொல்லாமல் என்னைத்தானே தேடுகிறீர்கள். நேரம் போவது கூட தெரியாமல் உலக அறிவை பெற்றுக்கொள்ளும் நினைப்பில் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுயநினைவை இழந்து தனியாக சிரிப்பதும், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வேலை செய்கின்றோம் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னைத்தானே கவனமாக பார்த்துக்கொள்கின்றீர்கள்.
நான் இல்லாமல் முழுதாக ஒரு மணிநேரம் கூட உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. நான் வந்த பிறகு நாட்காட்டி, கடிகாரம் ஆகியவற்றின் பாவனை குறைந்தது. நான் வளர வளர வானொலி, தொலைக்காட்சி, புத்தகங்கள் என எல்லாமே உங்களுக்கு தூரமாகின.
சகல வசதிகளையும் உங்கள் கைக்குள் கொண்டு வந்தும் என்னைக்கொண்டு பயன் பெறுவோர் எத்தனை பேர்? எந்த வடிவத்தில் இருந்தாலும் எந்த நிறத்தில் இருந்தாலும் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் நான் நான்தான், என்னுடைய செயற்பாடு ஒன்றுதான்.
என்னை வைத்துக்கொண்டு பெருமைப்படும் நீங்கள் என்னில் முழுமையாக தங்கியிருந்தால் எப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையை வாழப்போகிறீர்கள்? உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை எப்போது உருவாக்கிக்கொள்ளப் போகின்றீர்கள்?
என்னை உலகமாக நினைத்து எனக்கு அடிமையாகி இருக்கும் உங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உங்களுக்கான வாழ்க்கையை பறித்துக் கொண்ட பாவம் எனக்கு வேண்டாம். தயவுசெய்து என்னை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.” என்றவாறு சோகத்துடன் விடைபெற்றது.
ஒரு சில வினாடி உறைந்து போன நான், என்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தேன். என்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக சிரித்துப் பேசிய நாட்கள் எங்கோ தொலைவில் தெரிந்தது. என் திறமைகளும் திறன்களும் தூசு படிந்து பராமரிப்பற்று கிடந்தன.
வாழ்க்கை ஒரே ஒருமுறைதான் முடிந்தவரை ஒவ்வொரு நொடியிலும் பயன்பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். கைத்தொலைபேசியின் சார்ஜ்ஜை ஸ்விச் ஆஃப் செய்து வாழ்க்கைக்கான செயலியை ஒன் செய்தேன்.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.