இலங்கையில் அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம் : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை
அரச அதிகாரிகள் பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்கு அல்லது வேறு எந்தக் கணக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது பாரபட்சம் காட்டுவது போன்ற பிரச்சாரம் செய்வது கடுமையான குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாவிற்கு குறையாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் உரிமைகளை இழந்த அரசு அதிகாரிக்கும் கூட இந்த நடைமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அல்லது பாரபட்சம் காட்டுவதற்காக ஒருவரின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்கைப் பயன்படுத்துதல் மற்றும் ஏதேனும் விளம்பரம் அல்லது அறிக்கையை வெளியிடுவதும் அதே குற்றத்தின் கீழ் கருதப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் பொருந்தும். எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் கட்சிகள் அல்லது தனிநபர்களை ஊக்குவித்தல் அல்லது பாரபட்சம் காட்டுவதை தடுப்பதற்காகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை எண் 5இன் கீழ் இலக்கம் 8 IV மற்றும் இல. 17 இன் கீழ் ‘மிக முக்கியமானது’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள், தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது மேலாளர்கள் உட்பட அனைத்து அரச தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில், முந்தைய தேர்தல்களில் பெறப்பட்ட புகார்கள் குறித்து முறையான விசாரணையின் பின்னர் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.