மனோ மக்கள் பக்கமா? அல்லது கம்பெனிகள் பக்கமா? என்று வெளிப்படையாக கூற வேண்டும்!கேள்வி எழுப்புகிறார் இ.தொ.கா ரூபன் பெருமாள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் 1000 ரூபாய் சம்பளத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக அரசாங்கமும் அதற்கு செவி சாய்த்து வர்த்தமானியினை வெளியிட்டமை நம் அனைவரும் அறிந்த விடயம்.
எனினும், தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் பெருந்தோட்ட கம்பெனிகள் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், எமது மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய காலக் கட்டத்தில் மக்களைப் பற்றி சிந்திக்காது பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்து வருகின்றமையானது கண்டிக்கத்தக்க செயலாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
ஏனெனில், கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வரும் மனோ உள்ளிட்ட அவரது கூட்டணியினர் தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருந்த1700 ரூபா இடைநிறுத்தப்பட்டதை கொண்டாடும் வகையில் கருத்து தெரிவிப்பதானது, அந்த சமூகத்தைச் சார்ந்த ஸ்தாபனத்தின் உறுப்பினர் என்ற வகையில் மிகவும் வருத்தமளிக்கிறது என இரத்தினபுரி கஹவ த்தை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.
பல நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் பங்கேற்பில் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டம் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிமார் வர்க்கத்தினருக்கும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் மலையக அரசியல் கட்சிகளினதும் அண்மைக்கால செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நிலையில் மக்கள் படும் கஷ்டத்தினை புரிந்துக் கொள்ளாமல் அவர்களது அரசியல் சுயலாபத்திற்காக மக்களை திசை திருப்புவதற்கு முயற்சி செய்தாலும் கூட இன்று இவர்களின் வார்த்தைகளினாலேயே இவர்களது முகத்திரைகள் கிழிவதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது என ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.