மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்: மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்
நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து மத தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள்,மகளிர் அமைப்புகள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இன்றைய தினம்(20) நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் காணப்படும் அதே நேரம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கள்ளுத்தவறணை காணப்படுவதாகவும் மென் மதுபான சாலையை உடனடியாக நிறுத்துாறும் கோரப்பட்டுள்ளது.
அதே நேரம் நானாட்டான் ஒலி மடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மது பாவனையை ஊக்கப்படுத்துபவர் களே மக்களையும் மாணவர்களையும் வாழவைக்க உதவிடுங்கள், எமக்கு கிடைத்த சாபம் மதுக்கடை அதை இன்றே ஒழிப்போம், உழைப்பை பறிக்க வந்த சாத்தான் இந்த மதுபானமும் மதுக்கடையும்,குடி சிலரின் இன்பம் பலரின் துன்பம்,மது விற்று கிடைக்கும் காசு உனக்கே நீ தேடும் சாபம்,போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கான மனு நானாட்டான் பிரதேச செயலாளர் சிவசம்பு கனகம்பிகையிடம் கையளிக்கப்பட்டது.