வெள்ளத்தில் மூழ்கிய கண்டி தொடரூந்து நிலையம்!
கண்டி (Kandy) நகரில் நேற்று (16) பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இதேவேளை தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும் வடிகால்கள் மூடப்பட்டமையே, தொடருந்து நிலையம் நீரில் மூழ்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கண்டி நகரில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி ஒரே நேரத்தில் பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) தெரிவிக்கின்றது.
தொடருந்து பாதைகள்
இதையடுத்து, போகம்பரவிற்கு பின்புறமாகவுள்ள மலைப் பகுதியிலிருந்து பெருமளவான வெள்ள நீர், தொடருந்து நிலையத்தை நோக்கி பெருக்கெடுத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தொடருந்து நிலையத்தின் முன்பகுதி முற்றாக நீரில் மூழ்கியதுடன் தொடருந்து பாதைகளும் நீரில் மூழ்கியிருந்தது.
இதேவேளை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு
காவல்துறையினரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்றும் (17) மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அப்படியானால், எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட வீதியை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.