யாழ்.மாட்டீன் வீதி கொலை வழக்கு! மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை தள்ளுபடி
யாழ்ப்பாணம், மாட்டீன் வீதி கொலை வழக்கில் எதிரிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு எதிரி விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மேனகா விஜயசுந்தர, சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியை சேர்ந்த 85 வயதுடைய தேவராசா லில்லி மேரி என்பவரை, 2008 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 29 ஆம் திகதி கொலை செய்ததாக, இறந்தவரின் வீட்டில் வசித்து வந்த குணபாலசிங்கம் ஜெறோம் என்பவருக்கு எதிராக யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்கு தொடுக்கப்பட்டது.
தனது வீட்டிலிருந்து திடீரென காணாமல்போயிருந்த குறித்த மூதாட்டியின் சடலம், 2 மாதங்களின் பின்னர், அவரின் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
எதிரியின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, அப்போதைய யாழ்ப்பாண நீதிவான் ஆர். வசந்தசேனன் முன்னிலையில் யாழ்.பொலிஸாரால் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி கே. ரத்தினசிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் மொட்டையான ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதனால் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு என்பன மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டிருந்தது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காணாமல்போயிருந்த காலப்பகுதியில் அவர் வாழ்ந்த அதே வீட்டில் தனது மனைவி, பிள்ளையுடன் வாழ்ந்து வந்த எதிரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டு நகைக்கடைகளில் இருந்து உருக்கப்பட்ட நிலையில் சில நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடாத்தப்பட்ட வழக்கு விசாரணையில் அரச தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியத்தை தொடர்ந்து, எதிரியும் சாட்சியம் அவழங்கியிருந்தார்.
உயிரிழந்தவர் காணாமல்போவதற்கு முன்னரே தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் உயிரிழந்தவர் வசித்த வீட்டிலிருந்து தான் தனியே வெளியேறிச் சென்றுவிட்டதாகவும், தொடர்ந்து பொய்யான தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் பிள்ளையை தேடி தான் சென்ற போது, அங்கு யாரும் இருக்கவில்லை என்றும்,கொலைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
இவ்வழக்கில் தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது தனது மனைவி இறந்துவிட்டதாக அறிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால், திருப்திகரமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, குற்றத்தீர்ப்பு வழங்கி எதிரிக்கு மரணதண்டனை விதித்திருந்தார்.
இதற்கமைய, 2017 ஆம் ஆண்டு ஆனி மாதம் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பையும் மரணதண்டனையையும் ஆட்சேபித்து எதிரியினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி என தீர்ப்பளிப்பதற்கு போதுமான சாட்சியம் இல்லை என அவரின் சார்பில் வாதிடப்பட்டு இருதரப்பு வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு விசாரணையில் எதிரியின் சார்பில் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி எஸ். பஞ்சாட்சரத்தின் அனுசரணையுடன் முன்னிலையானார்.பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி சமிந்த விக்கிரமரத்ன வாதாடியிருந்தார்.
இந்நிலையில், நீதியரசர்கள் மேனகா விஜயசுந்தர, சசி மகேந்திரன் ஆகியோர் தமது தீர்ப்பில், குற்றச்சாட்டு நியாயமான அளவு சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து எதிரியை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.