சொகுசு பஸ்சை நாங்கள் எரிக்கவில்லை – உரிமையாளர்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ் புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விசமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக விபத்தில் எரிந்த காரை எக்ஸ்பிரஸ் பேருந்தின் உரிமையாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளேன் என்றார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தி.துவாரகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ் புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் ஜுன் 30ம் திகதி அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகியது.
எனினும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிருக்கோ உடமைக்கோ சேதங்கள் ஏற்படவில்லை.
விபத்தின் போது பேருந்து சாரதியும் நடத்துனரும் துணிகரமாக செயற்பட்டு பேருந்தில் பயணித்தவர்களை காப்பாற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சில ஊடகங்கள் பேருந்து திட்டமிட்டு எரிக்கப்பட்டதாக விசமத்தனமான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. செய்தி தொடர்பாக தெளிவு வேண்டியவர்கள் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை தொடர்பு கொள்ளலாம். பயணித்த 43 பேரின் விபரங்களையும் தர நான் தயார். அவர்களிடமே நடந்தவற்றை கேட்டறிய முடியும்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளேன் என்றார்.