என்னை சிறைச்சாலையில் வைத்து கொல்ல முயற்சி – வசந்த முதலிகே
சிறைச்சாலையில் இருந்த தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தாம் கைது செய்யப்பட்டு பேலியகொடை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வசந்த முதலிகே தெரிவித்தார்.
இதனையடுத்து, அங்கிருந்து எடெரமுல்ல காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இதன்போது காவல்நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார்.
விஜேவீரவுக்கு நடந்தது ஞாபகம் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய சில காவல்துறையினர், தமக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாக தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 167 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.