நான் பதவியேற்றமை பிழையெனின் நீதிமன்றம் நாடலாம் : இமானுவேல் ஆனால்ட் ஆவேசம்!
“யாழ். மாநகர முதல்வராக வழங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் மக்களின் தேவைகளை அறிந்து முடிந்த வரை நிறைவேற்றுவேன்” என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்லே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 19ஆம் திகதி யாழ். மாநகர முதல்வருக்கான தெரிவு இடம் பெற்ற போது கோரம் காணப்பட்ட நிலையில் எனது பெயரை முதல்வராக முன்மொழிந்தார்கள்.
இருப்பினும் கோரம் இல்லை என கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் எமது ஆட்சேபனைகளை உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
அதன் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எனது பெயரை முதல்வராக அறிவித்தால் விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநகரக் கட்டளை சட்டங்களுக்கு உட்பட்டு முதல்வராகப் பதவியேற்றுள்ளேன்.
சிலர் நான் பதவியேற்றமை சட்டத்தின் பிரகாரம் பிழையென கூறுவதாக அறிந்தேன் பிழை இருப்பின் அவர்கள் நீதிமன்றம் செல்லலாம் சட்டம் எதைச் சொல்கிறதோ அதை நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.
ஏற்கனவே மூன்று வருடங்கள் யாழ். மாநகர முதல்வராக கடமை ஆற்றியுள்ள நிலையில் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து குறுகிய காலத்துக்குள் எம்மால் ஆற்ற வேண்டிய அனைத்து பணிகளையும் ஆற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தெரிவின் மூலம் முன்மொழியப்பட்டபடி, இ.ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியானது.
அதனையடுத்து நேற்றைய தினம் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.