பல்கலை கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் விசாரணை
களனி பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், தாம் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று (01.10.2022) பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனது விரிவுரைகளை முடித்துக் கொண்டு விளையாட்டுப் பயிற்சிகளுக்காக பல்கலைக்கழக குழுக்களுக்குச் சென்று கொண்டிருந்த போது சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக மாணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சிரேஸ்ட மாணவர்கள், தமது தலைமுடி மற்றும் மீசையை ஒழுங்கமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
கைக்கடிகாரம் அணிய வேண்டாம் என்றும், காலணிகளுக்குப் பதிலாக செருப்புகளை மட்டுமே அணிந்து பல்கலைக்கழகத்திற்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதற்கு இரண்டாம் ஆண்டு மாணவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிரேஸ்ட மாணவர்கள் அவரை பல்கலைக்கழக உணவுச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மூன்று சிரேஷ்ட மாணவர்கள் இரண்டாம் வருட மாணவனின் முகத்திலும் உடலிலும் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஏழு மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர்கள் தனக்குத் தெரியாது எனவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சிரேஷ்ட மாணவர்களை அவர்களின் தோற்றத்தின் மூலம் அடையாளம் காண முடியும் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.