அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு
பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பல விடயங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலை 225 ரூபாயாகக் குறைந்துள்ளது.
375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பருப்பு 350 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோதுமை மாவின் சில்லறை விலையும் குறையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரிசி உட்பட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் லங்கா சதொச அறிவித்துள்ளது.
இருப்பினும், பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், வெதுப்பக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் குறைப்பு எதையும் அறிவிக்கவில்லை.
பாண் அல்லது பிற வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்கும் முடிவை இதுவரை எட்டவில்லை என்று சங்கங்கள் சுட்டிக்காட்டின.
கோதுமை மாவின் விலை அவ்வப்போது குறைந்தாலும் பாணின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 250 ரூபாயாக குறைத்தால் பாண் ஒன்றின் விலையை குறைக்க முடியும் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.