மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 4
2. உறுப்புரைகள் 14, 19, 21 ற்கிடையிலான தொடர்பு
இங்கு உறுப்புரைகள் 14, 19, 21 ஆகியன ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை என்றும் அவற்றை சேர்த்து வாசிக்கும் போது மட்டுமே அரசியலமைப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் எனவும் வாதிடப்பட்டது. நீதியரசர் பகவதி தீர்ப்பில் மேற்படி மூன்று உறுப்புரைகளுக்கிடையிலான தொடர்பை விளக்கினார். உறுப்புரை 21 ன் கீழான மீறல்கள், நடபடிமுறை தேவைப்பாடுகளானது உறுப்புரை 14, 19 ஆகியவற்றுடன் பரிசோதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதாவது உறுப்புரை 21 ஆனது உறுப்புரை 19ஆல் கட்டுப்படுத்தப்படுவதால் உறுப்புரை
19 ன் தேவைப்பாடுகளையும் அது பூர்த்தி செய்யவேண்டும் என்றார். எனவே மனிதனொருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மீறப்படுவதற்கு காரணமான நடபடிமுறையானது உறுப்புரை 21 ஐ மட்டும் திருப்திப்படுத்தாமல் உறுப்புரை 19ன் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன் சட்டவாட்சி கோட்பாடுகளை உள்ளடக்கிய உறுப்புரை 14 ம் கவனத்திலெடுக்கப்படவேண்டும் என கூறப்பட்டது. எ.கே. கோபாலன் வழக்கில் பெரும்பான்மை தீர்ப்பில் மேற்குறித்த மூன்று உறுப்புரைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புபடவில்லை என தீர்க்கப்பட்டிருந்தது. எனினும் மேனகாகாந்தி வழக்கு தீர்ப்பு மூலம் இந்த தீர்ப்பு புறத்தொதுக்கப்பட்டது. இந்த மூன்று உறுப்புரைகளும் இந்திய அரசியலமைப்பில் தங்கமுக்கோணம் என அழைக்கப்படுகின்றது. அந்த தங்கமுக்கோணம் மனிதனொருவரின் உரிமை மீறப்படுவதிலிருந்து அடிப்படை பாதுகாப்பு வழங்குவதாக கருதப்படுகின்றது. மேனகாகாந்தி வழக்கில் இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
3. உறுப்புரை 21ல் உள்ளடங்கும் உரிமைகள்
இந்த வழக்கில் வாதி, உறுப்புரை 21 ல் கூறப்பட்ட தனிப்பட்ட சுதந்திரத்தில் வெளிநாடு செல்வதற்கான உரிமையை வழங்குவதுடன் உபபிரிவு 10(3)(c) அதற்கு தடைவிதிப்பதால் அது அரசியலமைப்புக்கு முரணானது என வாதிட்டார்.
நீதியரசர் தீர்ப்பில் சற்வங்சிங் எதிர் ராமரத்தினம் வழக்கு(1967)(Satwant Singh Sawhney v. D. Ramarathnam, (1967) AIR 1836, 1967 SCR (2) 525) தீர்ப்பை மேற்கோள்காட்டி உறுப்புரை 21 வெளிநாடு செல்லும் உரிமையை உள்ளடக்குவதாக கூறினார். மேற்படி வழக்கில் சற்வஙசிங் எனும் தொழிலதிபரின் கடவுச்சீட்டை இந்திய அரசு முடக்கிய நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் உறுப்புரை 21ல் மேற்குறித்த உரிமை உள்ளடக்கப்படுவதுடன் சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடைமுறைகளை தவிர எந்தவொரு சட்டத்தின் மூலமும் வெளிநாடு செல்லும் உரிமையை தடுத்தலாகாது என கூறப்பட்டுள்ளது.
மேனகாகாந்தி வழக்கில் நீதியரசர் கிருஸ்னா ஐயர் கூறுகையில் பயணம் செய்யும் உரிமையானது சுதந்திரத்தை அனுபவித்தலில் முக்கியமானது என்றார். மேலும் உறுப்புரை 21 ஆல் வழங்கப்பட்ட தனிப்பட்ட சுதந்திரம் குறுகிய பரப்பில் மற்றும் கடுமையாக பொருள்கோடல் செய்யப்படலாகாது எனவும் நீதிமன்றம் கூறியது.
அத்துடன் உறுப்புரை 21ல் கூறப்பட்ட உயிர்வாழும் உரிமையானது வெறுமனே பௌதீக
உரிமையாக(Phலளiஉயட சுiபாவள) மட்டுமல்லாமல் கௌரவத்துடன் வாழ்தலையும்
குறிக்கும் எனப்பட்டது. இந்த உறுப்புரையின் எல்லையை பரந்தளவில் நோக்கியமை
இவ்வழக்கின் மெச்சத்தக்க அம்சமாகும்.
இந்த வழக்கின் பின்னராக இந்தியக்குடியரசின் ஒவ்வொரு பிரஜையும் உறுப்புரை 21 ல் உள்ளடங்கும் சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளை வென்றெடுக்க உதவியது. இந்த வழக்கின் தீர்ப்பு நியாயத்தை பின்பற்றி பின்னைய வழக்குகளில் மேற்குறித்த உறுப்புரையில் சுத்தமான நீருக்கான உரிமை, சுத்தமான காற்றுக்கான உரிமை, ஒலி மாசுபடலிலிருந்து பாதுகாத்தலுக்கான உரிமை, சட்ட உதவிக்கான உரிமை, வாழ்வாதாரத்திற்கான உரிமை, மருத்துவ பாதுகாப்புக்கான உரிமை போன்றவையும் உறுப்புரை 21ன் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டன.
தொடரும்