அடுத்த வாரம் போக்குவரத்து சேவை முற்றாக முடங்கும் அபாயம்
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டினால், அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளது. டீசல் இன்மையால், இன்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. நாளைய தினம் இந்த நிலைமை மேலும் தீவிரமடையும்.
எரிபொருள் வழங்கப்படாமையால், அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த வாரத்தில், பாடசாலை போக்குவரத்து சேவைகளும் தடைப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
டீசலைப் பெற்றுக்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதன் காரணமாக பாடசாலை பேருந்து சேவையிலிருந்து பலர் விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.