fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் சிசு மரணம்

வவுனியா வைத்தியாசலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சிசுவின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, இன்று (21) மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி சிசுவின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்குமூலங்களை பெற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா (Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்துக்கு சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு (20.08.2024) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் தாயார் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், உரிய நேரத்துக்கு சிகிச்சை அளித்திருந்தால் சிசுவை காப்பாற்றியிருக்கலாம் என சிசுவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது,

“வவுனியா, செட்டிகுளம், பிரமனாலங்குளம் பகுதியில் வசிக்கும் நான், எனது மனைவியை பிரசவத்திற்காக கடந்த 17ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன்.

மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது. இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை தெரிவித்திருந்தார்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக் கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார்.

பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு கொடுத்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர். மறுநாள் வைத்தியசாலைக்கு வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சத்திரசிகிச்சை செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த வைத்தியரிடம் கூறியிருந்தார்.

இதனையடுத்து, மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சை கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றினர்.

பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார். அங்கு சென்ற போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள். அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது 5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர்.

இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம். எனினும் குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர்.

பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே, வைத்தியர்களின் அசமந்த போக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்கமாட்டேன்” என்று கூறியு்ள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகுணன் அவர்களிடம் கேட்டபோது உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Back to top button