
லங்கா சதொச நிறுவனம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
லங்கா சதொச நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 93 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் நிதி நிலைமைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து மக்களுக்குத் தெரிவிக்க அனைத்து தகவல் இணையத்தளமும் (www.lankasathosa.org) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சதொச நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 26774 மில்லியன் நிகர வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு வீதம் அல்லது 837 மில்லியன் வருமான வளர்ச்சியாகும். மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் முடிவில், நிறுவனம் 93 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 333 மில்லியன் இழப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது 2023ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நட்டம் 108 வீதத்தால் குறைந்துள்ளது.
2024 ஜனவரியில் இருந்து ஊழியர்களின் சம்பளம் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் அரச திறைசேரியில் இருந்து எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலையிலும் முதல் ஆறு மாதங்களில் 93 மில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளது.