யாழ் நிலா’ சொகுசு ரயில் சேவை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் ஆரம்பம்
காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை ‘யாழ் நிலா’ என்ற சொகுசு ரயில் சேவை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘யாழ் நிலா’ ரயிலில் ஒரு இடத்துக்கு முதல் வகுப்பு டிக்கெட் ரூ.4000, இரண்டாம் வகுப்பு டிக்கெட் ரூ.3000. மூன்றாம் வகுப்பு டிக்கெட்டின் விலை 2000 ரூபாய்.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு காங்கேசன்துறையினை சென்றடையும்.
காங்கேசன்துறையில் நிறுத்தப்பட்ட ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிசை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும் மற்றும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் சீதாவக்க ஒடிஸி ரயில் கோட்டையில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 10.11 வரையிலும், அவிசாவளையில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
இந்த யாழ் நிலா சொகுசு ரயிலில் மூன்றாம் வகுப்பில் 106 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 128 இருக்கைகள், முதல் வகுப்பில் 336 இருக்கைகள் மற்றும் உள் துப்புரவு வசதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உள்ளது. ஆன்லைனிலேயே இருக்கைகளை முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் எல்ல ஒடிஸி மற்றும் சீதாவக்க ஒடிஸி புகையிரதங்களுக்கு மேலதிகமாக யாழ் நிலா ஒடிஸி புகையிரதமும் சேவையில் சேர்க்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்தேவி ரயில் வடக்கையும் தெற்கையும் இணைத்து நீண்ட நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யுத்த மோதல்களின் பின்னர் வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் ரயில் சேவையை நிறுத்த வேண்டியிருந்தது. அநுராதபுரத்தில் இருந்து ஓமந்த வரையிலான பகுதி முற்றாக சீர்செய்யப்பட்டு, மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரதப் பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதில் பேசிய ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர சமன் பொல்வத்தகே, 2022 ஆம் ஆண்டு எல்ல ஒடிஸி ரயில் 152 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது. எல்லா ஒடிஸி ரயில் 2023 ஆம் ஆண்டு வரை 144 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேல் மாகாணத்தை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீதாவக்க ஒடிசி சுற்றுலா ரயிலின் மூலம் 2.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.