மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் அலி சப்ரியின் பங்கு குறித்து சாணக்கியன் கேள்வி
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவம்படுத்துகின்றாரா அல்லது அவர் தனது வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றாரா? என்று அவர் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார குற்றங்கள்
இலங்கையில் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்படவில்லை என அமைச்சர் சப்ரி ஐக்கிய மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்த போதிலும், பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, நீதியமைச்சராக இருந்து அரசியலமைப்பில் 20வது திருத்தத்தை கொண்டு வந்தமையால் பொருளாதார குற்றத்துக்கு, சப்ரியும் பொறுப்பேற்க வேண்டும் என சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் டொலர் கையிருப்பு
20வது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டமை காரணமாகவே, இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதியினால் அழிக்க முடிந்தது. அதனால் பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் டொலர் கையிருப்பு முற்றாக அழிந்துவிட்டது. உரத்தடை காரணமாக விவசாயிகள் மில்லியன் கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டினால் மீன்பிடித்தொழில் அழிந்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் அலி சப்ரியின் வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவே இந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு காரணம் என சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.