
மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை
மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி, “சென்ட்ரல் லோன்” என்ற நிறுவனத்துடன் இணைந்து, சலுகை வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி, தனிப்பட்ட வங்கித் தகவல்களையும், முக்கியத் தகவல்களையும் பல்வேறு தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் எண்களின் மூலம் பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், “சென்ட்ரல் லோன்” என்ற நிறுவனத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் வேறு எந்த மூன்றாம் தரப்பினர் ஊடாகவும் கடன் வழங்குவதில்லை என்றும் மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
அத்தோடு, கணக்கு எண்கள், வங்கி அட்டை எண்கள், பின் எண்கள், OTP எண்கள் போன்றவற்றை அல்லது நிகழ்நிலை பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இதுபோன்ற மோசடி தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் மக்கள் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.