பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது மாணவிகள் தாக்குதல்
பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியரை மாணவிகள் உருட்டுகட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம்,கட்டேரி கிராமத்தில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சின்மயமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அப்போது அவர் சில மாணவிகளை தனது அறைக்கு அழைத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது மட்டுமின்றி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று அவர் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். அந்த மாணவி கூச்சலிட்டு அவரின் அறையில் இருந்து தப்பி வந்துள்ளார். மேலும், சக மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகள் அவரை தாக்க முயற்சித்தனர்.
அவர் அறையின் கதவை மூட முயன்றவரை தடுத்து உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு தெரியவரவே அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சின்மயமூர்த்தி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மட்டுமின்றி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மாணவிகளை மிரட்டி வந்ததும் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அவர்களின் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.இதனை அடுத்து, காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.