பாடல் போட்டி என்ற பெயரில் பல இலட்சம் ரூபாய் பண மோசடி
இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபா வசூல் செய்து போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளது.
முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடத்தி மன்னாரில் இன்றைய தினம் (27.08.2023) இறுதிப்போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.மன்னார் மாவட்டத்தில் இருந்து மாத்திரம் இல்லாமல் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரேலியா, கொழும்பு மற்றும் மாத்தளை என இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து குறித்த போட்டியில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
மூன்று மாதங்களாக குறித்த போட்டியை பதிவு செய்யப்படாத வானொலி ஒன்றின் பெயரின் ஊடாக விளம்பரப்படுத்தி தென் இந்தியாவில் இருந்து பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
பல லட்சம் பெறுமதியான பரிசில்கள் இருப்பதாக தெரிவித்தும் கலந்து கொள்பவர்களிடம் 1750 ரூபாய் வீதம் வங்கி கணக்கி வைப்பிலிடுமாறு குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பண வசூல் இடம் பெற்றுள்ளது.
மேலும் இன்றையதினம் இறுதி போட்டியில் கலந்து கொண்டவர்களிடம் 1750 ரூபாயும் மற்றும் பார்வையாளர்களிடம் 400 ரூபாயும் வசூல் செய்து மண்டபத்திற்குள் அனுமதி வழங்கியிருந்தனர்.
சுமார் 1000 மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி குறித்த நிகழ்சியை பார்வையிடுவதற்காக காத்திருந்தனர்.
8 மணிக்கு ஆரம்பிப்பதாக அறிவித்த போட்டிகள் 11 மணியளவிலே ஆரம்பித்தாகவும் இசைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டதாகவும் குறிப்பாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடனத்துடன் சம்மந்தப்பட்ட கலாச்சர உத்தியோகஸ்தர் ஒருவரும் வேறு அடையாளம் தெரியாத மூவரும் நடுவர்களாக கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பல முறை நிகழ்சியின் இடை நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில் குண்டர்கள் சிலர் போட்டியாளர்களை மிரட்டி அமர வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த போட்டியாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இன்றைய தினம் போட்டி ஒழுங்கான முறையில் இடம் பெறவில்லை என்பதுடன் வெற்றியாளர்களும் தெரிவு செய்யப்படவில்லை.
குறித்த போட்டியின் உண்மை தன்மை அறியாது இலங்கையின் பல பாகங்களில் இருந்து பல நூறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு பணத்தினை இழந்துள்ளனர்.
குறிப்பாக முன்னதாகவே பல வெற்றிகளை பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியை இப்போட்டியில் பாட வைப்பதற்காக ஒரு கிராமமே பேரூந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஒரு இலட்சத்துக்கு மேல் செலவு செய்து இந்த நிகழ்சிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.