பாடசாலை விடுமுறையினை குறைத்து பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களின் பாடசாலை விடுமுறையினை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற யோகா தின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மேலதிகமாக நடத்தப்படும் பாடசாலை நாட்களில், இதுவரை தவறவிடப்பட்ட இந்த ஆண்டுக்கான பாடவிதானங்களை பூர்த்தி செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், உயர்தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பினூடாக பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சகல மாகாணங்களின் கல்வி பணிப்பாளர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.