நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு
இலங்கை மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி, சுங்க மற்றும் மதுவரித் திணைக்களங்களை கூட்டிணைத்து இலங்கை வருமான அதிகாரசபையை நிறுவும் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தை எதிர்த்து எதிர்வரும் ஜுலை மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பனவற்றின் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளன.
வருமான இலக்குகளை பூர்த்தி செய்யும் இந்த மூன்று நிறுவனங்களின் செயற்திறனை மலினப்படுத்தும் வகையில் சட்ட மூலம் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்ட மூலங்களினால் பொருளாதாரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சங்கத்த்தின் இணைச் செயலாளர் நிரோசன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், ஒரு தலைப்பட்சமாக இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்ட மூலத்தின் ஊடாக முக்கிய நிறுவனங்கள், நிதி அமைச்சின் சில அதிகாரிகள் கீழ் இயங்க நேரிடும் எனவும் இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் நிரோசன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.