
திருகோணமலையில் இந்தியாவின் கைத்தொழில் வலயம்: ஜெய்சங்கர் உறுதி
இலங்கையின் திருகோணமலையில் ஒரு கைத்தொழில்துறை வலயம் ஒன்றை நிறுவவுள்ளதாக இந்தியா (India) அறிவித்துள்ளது
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (Jey Shankar) இதனை இன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்
இது ஏராளமான இந்திய முதலீட்டாளர்களையும் பிற நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை முன்னெடுக்கவும், பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை விஜயத்தை ஏற்பாடு செய்யவும் தாம் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் புதிய பொருளாதார மாற்றச் சட்டம் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார நிர்வாகத்தில் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் என்று ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க யோசனை அடுத்த ஜூலை மாதத்திற்குள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருவரும் இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான சுமுக தீர்வு குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.இந்தநிலையில் இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் லய்ன் அறைகளை கொண்ட பெருந்தோட்டங்கள், வர்த்தமானியின் மூலம் பெருந்தோட்ட கிராமங்களாக அறிவிக்கப்படும் என்றும் உள்நாட்டு அமைச்சகத்தின் கீழ் அவை அபிவிருத்திச்செய்யப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .