fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணி எமது தமிழ் மக்கள் கூட்டணி தான்

தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணி எமது தமிழ் மக்கள் கூட்டணி தான் என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. 

அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

பல்கலைகழக மாணவனாக 2010 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். ஒரு அரசியல் இயக்கமாக செயற்பட்டோம்.

பின்னர்  2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என கூறினார்கள். நாம் தேர்தலை புறக்கணித்தால் ராஜபக்சே க்களின் ஆட்சி மீண்டும் வரும் என கூறினோம் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் இருந்து அவர்களோடு கருத்து முரண்பாடு நிலவி வந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு அவர்களோடு இணைந்து செயற்பட முடியாது என நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். 

அதுபோன்று , சர்வதேச விசாரணைகள் தேவை என வடமாகாண சபை முதலமைச்சராக இருந்த சி.வி விக்னேஸ்வரன் மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியதை அடுத்து அவரை தமிழரசு கட்சி வெளியேற்றியது. 

அந்நிலையிலையே நாம் இருவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டது. நாம் தற்போது தமிழ் மக்கள் கூட்டணியாக பயணிக்கிறோம் 

எமது தேர்தல் பிரச்சாரங்களில் நாம் மற்றைய கட்சிகள் மீது சேறு வீசும் தேவை எமக்கு இல்லை. நாங்கள் என்ன செய்தோம், என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு நாங்கள் சேவை செய்துள்ளோம். அதனை முன்னிறுத்தியே எமது தேர்தல் பிரச்சாரங்கள் இருக்கும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான சூழலை அடுத்து தென்னிலங்கையில் பழைய அரசியல்வாதிகளை தென்னிலங்கை மக்கள் ஓரம் கட்டி விட்டனர். அவர்களும் அரசியலில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டனர். 

ஆனால், தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ எதுவும் செய்யாத தமிழ் அரசியல் வாதிகள் இன்றும் தேர்தலில் நிற்கின்றனர். அவர்களை தமிழ் மக்களும் ஓரம் கட்ட வேண்டும். 

தற்போதைய நிலையில் மக்களை ஏமாற்றாத ஒரு அணியாக தமிழ் மக்கள் கூட்டணியே உள்ளது. 

மற்றைய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் 10,  20 வருடங்களாக  நாடாளுமன்றில் இருந்தும் எதுவும் செய்யாதவர்கள்.

நாங்கள் இளைஞர்களாக கடந்த காலத்தில் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளோம்.

கோட்டாபய ராஜபக்சே ஆட்சி காலத்தில் பயங்கரவாதி என என்னை கைது செய்தார்கள். நான் பயங்கரவாதியா ? மாநகர சபையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பிய நான் பயங்கரவாதி என கைது செய்தார்கள். 

இப்படியெல்லாம் மாநகர சபை செயற்படலாம். மாநகர முதல்வரால் ஒருவரால் இப்படியெல்லாம் செய்ய முடியும் என செய்து காட்டினோம்.

அதே போன்று எமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினரால் இதெல்லாம் செய்ய முடியுமா ? என நீங்கள் வியக்கும் அளவுக்கு செய்து காட்டுவோம். 

நீங்கள் விரும்பும் மாற்றம் எம் ஊடாக கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.

Back to top button