சீனாவை தாக்கிய டொக்சூரி சூறாவளி- 7 இலட்சம் பேர் பாதிப்பு
வலிமைவாய்ந்த டொக்சூரி சூறாவளியினால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பசுபிக் பெருங்கடலில் உருவான டொக்சூரி புயல் மணித்தியாலத்திற்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் உருவாகி சீனா, பிலிப்பைன்ஸ் தைவான் ஆகிய நாடுகளை புரட்டி போட்டுள்ளது.
டொக்சூரி புயல் காரணமாக சீன தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை மையம் விடுத்துள்ளது.
இதேவேளை, அங்கு சூறாவளியினால் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த வானிலை ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சீனாவின் கடலோர புஜியான் மாகாணத்தில் சூறாவளி தாக்கியதில் சுமார் 724,600 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 416,000 க்கும் அதிகமானோர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டொக்சூரி சூறாவளி பிலிப்பைன்ஸில் அதிகப்படியான பாதிப்புக்களை பிலிப்பைன்ஸிலும் ஏற்படுத்தியது. சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமையன்று பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற படகு விபத்தில் 30 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை, தைவானையும் தாக்கிய டொக்சூரி சூறாவளியால் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், 68 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக தைவானின் மத்திய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 278,182 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் வெள்ளிக்கிழமையன்று தாமதமானதுடன், இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது