சீனாவால் ஒரு தீவில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக 80,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சீனாவில் உள்ள பிரபலமான தீவு ஒன்றில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சீனாவின் ஹவாய் என்று அழைக்கப்படும் சன்யா பகுதியிலேயே மக்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். சன்யாவில் இருந்து விமானங்கள் மட்டுமின்றி ரயில் சேவையும் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 263 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அடுத்த நாள், சன்யா நகர நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்தது. மேலும், சுற்றுலாப்பயணிகள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் தொற்று இல்லை என்ற 5 PCR சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் வெறும் 15,000 இறப்புகள் மட்டுமே சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள், தொடர் சோதனைகள், உள்ளூர் ஊரடங்குகள் என மக்கள் கடும் இன்னலுக்கு இலக்காகினர்.
தற்போது சன்யா நகரில் கடும் விதிகள் அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை உச்சத்தில் இருந்த வேளையில் கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட பயணிகளுக்காக, ஹொட்டல்களில் 50% தள்ளுபடி அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சன்யா மட்டுமின்றி, கொரோனா முதன்முறையாக அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் வூஹான் நகரிலும் தற்போது மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.