
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிறுமிகள்
கண்டியில் உள்ள அரச நன்னடத்தை திணைக்களத்திற்கு சொந்தமான சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுமிகளை பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவர் தடுப்பு நிலைய கண்காணிப்பாளர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கமைய நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை சந்தேகநபர் பணத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மடத்துகம பொலிஸ் நிலையத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 8 ஆம் திகதி இரவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுவர் தடுப்பு நிலையத்தின் உதவியாளர் ஒருவர் சிறுமிகளை தவறான நடவடிக்கைகளுக்காக அதே தடுப்பு முகாமில் தேவையான அறை வசதிகளை செய்து கொடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியொருவர் 06 ஆண்களுக்கு பணத்திற்காக விற்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவர் தடுப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து முறைப்பாடு செய்த சிறுமியின் பாதுகாப்பிற்காக தற்போது அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 9 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.