fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

சிதைவடைந்துள்ள தமிழ் தேசிய அரசியலுக்கு புத்துயிர் ஊட்டுவோம் – கி.கிருஸ்ணமீனன்

சிதைவடைந்துள்ள தமிழ் தேசிய அரசியலுக்கு புத்துயிர் ஊட்டி எமது உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாகவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள்  தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என கி.கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

  சிதைவடைந்துள்ள தமிழ் தேசிய அரசியலையும், அரசியலில் மக்களுடைய நம்பிக்கையீனத்தை போக்கியும், தமிழ் தேச அரசியலுக்கு புத்துயிர் ஊட்டி , மீள எமது உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கவே நாங்கள் இந்த தேர்தலில் இளையோரை ஒருங்கிணைத்து போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.

அதேவேளை அவர்களின் கொள்கை பிரகடனமும் இன்றைய தினம் வெளியிடப்பட்டது. 

அ. ஈழத் தமிழ் மக்களாகிய நாம் பேரினவாத சிங்கள அரசியல் தலைவர்களாலும் இனவாத செயற்பாட்டாளர்களாலும் அன்று முதல் தற்போது வரை எதிர்நோக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, ஒடுக்கு முறைகள், அச்சுறுத்தல், காணாமல் ஆக்கப்படுதல், நில ஆக்கிரமிப்பு, தாயக நிலப்பரப்பில் பௌத்த விகாரைகளை நிறுவுதல், தமிழர் தம் கலை கலாச்சார பண்பாடுகளை சிதைத்தல், வளச்சுரண்டல் போன்ற பல்வேறு இனவாத மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு தீர்வுகாணல்.

01. இவ்வாறான இனவாத செயற்பாடுகள் அனைத்தையும் இனம் கண்டு முறையாக ஆவணப்படுத்தல்.

02. இவற்றிற்கு எதிராக சட்டங்களை முறையாக கையால்தலும்,  மக்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளை சரியான முறையில் பாராளுமன்றில் வெளிக்கொண்டுவருதலும்.

03. இவற்றிற்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட பல்வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முழுமூச்சுடன் முன்னெடுத்தல்.

04. முறையான வெளியுறவுக் கொள்கைகள் மூலம் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தலும் தீர்வு காணலும்.

ஆ. இலங்கையில் இனவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தெற்கு அரசியலால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு சர்வதேச பொறிமுறைகளின் ஊடாக தீர்வினை பெற்றுக்கொள்ளுதலும் மீள் இவ்வாறான இன அழிப்பு மற்றும் ஒடுக்கு முறைகள் பேரினவாத சிங்கள செயற்பாட்டாளர்களால் தமிழ் மக்கள் மீது ஏற்படாமையை உறுதி செய்தலும்.

01. இலங்கையில் இனவாத செயற்பாடுகள் ஆரம்பமான காலம் தொடக்கம் இன்று வரை பேரினவாத சிங்கள செயற்பாட்டாளர்களால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகளை முறையான ஆவணப்படுத்தல்.

02. 2009 ஆம் ஆண்டு வன்னி பிராந்தியத்தில் சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளால் அரச கட்டமைப்புகளைக் கொண்டு நிகழ்த்திய மனித உரிமை மீறல் செயல்பாடுகளை சிறப்பு ஆவணப்படுத்தல்.

03. 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலம் தொடக்கம் இன்று வரை தமிழர் பிரதேசங்களில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரச  பொறிமுறைகளூடான  இன அழிப்பு மற்றும் அத்துமீறல் செயல்பாடுகளை முறையான ஆவணப்படுத்தலும் இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உடனடியாக செயல்படுதலும்.

04. சர்வதேசரீதியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொறிமுறைகளின் ஊடாக முறையான வெளியுறவு கொள்கைகளை பாவித்து குற்றம் நிகழ்த்திய அவர்களுக்கு தண்டனைகளை பெறுவதுடன் எமக்கான நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ளுதலும், மீள இவ்வாறான இன அழிப்பு மற்றும் ஒடுக்கு  முறைகள் நிகழாமையை உறுதி செய்தலும்.

இ. எதிர்கால அரசியல் செயற்பாடுகள்.

01. மக்கள் ஆணையுடனான எமது வெற்றியை தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டமைப்பானது அரசியல் கட்சியாக ஜனநாயக ரீதியிலே பதிவு செய்யப்படுவதோடு நாம் ஓர் மக்கள் இயக்கமாக கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி எமது பயணம் என்றும் சரியான பாதையிலே சென்றடையத்தக்க யாப்பு ஒன்றினை எமது நோக்கத்திற்காக புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், சிவில் பொது அமைப்புகள், மதக்கட்டமைப்புகள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி உருவாக்கிக் கொள்வோம்.

02. தொடர்ச்சியாக எமது கட்டமைப்பு ரீதியான ஜனநாயக அரசியல் இயக்கத்தின் நோக்கங்களை சரியாக விளங்கிக் கொண்டு எமது செயற்பாடுகளுடன் சேர்ந்து தமிழ் மக்கள் கூட்டமைப்பாக பயணிக்க வரும் தலைவர்களையும் அனைத்து செயற்பாட்டாளர்களையும் முறையாக ஆராய்ந்து பரிசீலனைப்படுத்தி அவர்களை எமது மக்கள் இயக்கத்தின் அங்கத்தவர்களாக சேர்ப்பதோடு எமது தமிழ் மக்கள் கூட்டமைப்பானது முறையான கட்டமைப்பு ஒன்றினை வடக்கு கிழக்கு முழுவதையும் உள்வாங்கி கட்டமைக்கப்படும்.

03. தாயகத்திலே பிறக்கின்ற எமது தமிழ் மக்கள் கூட்டமைப்பானது புலம்பெயர் தேசத்திலே பல ஏக்கங்களுடன் வாழ்ந்து வருகின்ற எமது தாய்மண் உறவுகளில் இருந்தும் எம்மோடு சேர்ந்து பயணிக்க விரும்புகின்ற செயற்பாட்டாளர்களை முறையாக ஆராய்ந்து பரிசீலனை செய்து எமது மக்கள் இயக்கத்தில் உள்வாங்கி தாயகத்திலும் புலத்திலும் முறையாக தமிழ் மக்கள் கூட்டமைப்பினை கட்டமைத்தல்.

04. முறையாக கட்டமைக்கப்பட்ட எமது தமிழ் மக்கள் கூட்டமைப்பு இயக்கத்திற்கு ஊடாக சிறந்த தன்னிறைவு பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுவதோடு சுய தொழில் முனைவோர்களின் கைகளை வலுவடையச் செய்வதன் மூலமாகவும் பல புதிய விவசாய, வியாபார, கைத்தொழில், மீன்பிடி மற்றும் ஏற்றுமதி உற்பத்தி வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் எமது இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.

05. பல்வேறு மக்கள் நலச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

கல்வி, விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்தி செயல்திட்டங்கள்.

பாரம்பரிய மருத்துவத்தினை அபிவிருத்தி செய்தலும், நவீன மயப்படுத்தப்பட்ட சுகாதார நலத்திட்டங்களும்.

எமது தேச வளங்களை சரியான திட்டமிடல்களுடன் பயன்படுத்தலும் பாதுகாத்தலும்.

நவீன மயப்படுத்தப்பட்ட முறையான கலாச்சார பண்பாடும் பாரம்பரியங்களை பாதுகாத்தலும்.

முறையான ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்கள். கடந்த கால மற்றும் நிகழ்கால அனைத்து செயற்பாடுகளிலும் முறையான ஆவணப்படுத்தலும் எதிர்கால திட்டமிடலும்.

 குறிப்பிட்டவாறு  பல்வேறுபட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு ஊடாக அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் கூட்டமைப்பினுள் வழிப்படுத்தி உள்வாங்கி வடக்கு கிழக்கு முழுவதிலும் வாழ்கின்ற மக்களுக்கு தன்னிறைவான வாழ்க்கை முறையினை ஏற்படுத்துதல்.

06. எமது முறையான கட்டமைப்பின் ஊடாக வடகிழக்கில் ஏற்படுகின்ற மாற்றங்களை தெற்கு அரசியலால் கையாள முடியாத சூழலை உருவாக்குவதன் ஊடாக தமிழ் மக்கள் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த தேசியம் என்பன அங்கீகரிக்கச் செய்தல்.

 07. ஜனநாயகரீதியிலே சிறந்த அபிவிருத்தியுடன் கூடிய நிறைவான நிலையான வாழ்க்கை முறையினை எமது ஈழத்தமிழ் மக்களுக்கு உருவாக்குவதுடன் பூலோக அரசியல் நகர்வுகளையும் பூலோக நலன்களையும் கருத்தில் கொண்டு புதிய நலத் திட்டங்களையும் உருவாக்கி சிறப்புற தமிழ் மக்கள் கூட்டமைப்பானது முற்றுமுழுதாக ஓர் மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக இயங்குதல். இதற்காக தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் விலை போகாத சோரம் போகாத அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து

தொடர்ந்து இடம்பெற்று  வரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடராத வகையில் குறைந்த பட்சம் சமஸ்டி அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வின் மூலம் இழந்த இறையாண்மையை மீளப்பெறத் தேவையான நகர்வுகளை முன்னெடுப்போம். 

அவ்வாறு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தென்னிலங்கை அரச தரப்புக்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் இணங்காத பட்சத்தில்.! தமிழ் மக்களின் தலைவிதியை தமிழ் மக்களே தீர்மானிக்கும் வண்ணம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பை நோக்கிய ஜனநாயக வழிமுறையை பின்பற்றி நிரந்தர அரசியல் தீர்வை பெற நிலத்திலும் புலத்திலும் உள்ள அனைத்து தமிழர் தரப்பையும் ஒருங்கிணைத்து செயலாற்றுவோம் என தமிழ் இளையோர் ஆகிய நாம் உறுதிபூண்டுள்ளோம் என அவர்களின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Back to top button