
ஈரான் அதிபர் மரணத்தால் தங்கம், பெட்ரோல் விலை உயரும் அபாயம்.., உலகளவில் தாக்கம் ஏற்படுமா?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகளவில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அவரது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தார்.
அவருடன் வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன், அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சிலரும் விபத்தில் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகளவில் பெரிதளவில் பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மரணத்தை தொடர்ந்து திங்கள் கிழமை சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
அதாவது WTI கச்சா எண்ணெய் விலையானது 0.41% அளவுக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.48% அளவுக்கும் ஒரே நாளில் உயர்ந்தது.
இதில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ஈரானிடம் இருந்து கணிசமான அளவுக்கு இறக்குமதி செய்கிறது.
அதோடு, ஈரானிடம் இருந்து உலர் பழங்கள், ரசாயனங்கள், கண்ணாடி பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதேபோல இந்தியாவில் இருந்து ஈரானுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஈரானில் தற்போது இருக்கும் நிலைமையின் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இந்த காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
மேலும், ரைசியின் மரணத்தால் பங்குச் சந்தையில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதலீட்டார்கள் தங்கத்தை நோக்கி சென்றுவிட்டதால், அதற்குரிய டிமாண்டும் அதிகரித்து தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரானில் ஒரு நிலையான தலைமை உருவாகும் வரை இந்த நிலைமை மாறாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.