இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும், இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் வழங்குகின்றோம்.
இலங்கை மக்களே தெரிவு செய்ய வேண்டியவர்கள், இலங்கை தீர்மானிக்கும், இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம்.
மேலும், இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும், அனைத்து இலங்கையர்களுக்குமானது என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்தியத் தூதுவர்,இதற்குச் சில காலம் எடுக்கும். இது நீண்ட திட்டம். இது ஓரிரு வருட திட்டம் இல்லை. எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரிவிக்க முடியாது.
ஐந்து, ஆறு வருடங்கள் நீடிக்கலாம். இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது. இதனைப் பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.