
இன்னும் ஏன் தாமதம்?
“இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.” இது இன்றைய காலத்திற்கு மிக அவசியமான ஒரு வாசகமாக இருப்பதாக எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா?
நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டே போகும் பொருட்களுக்கு மத்தியில் மரணங்கள் மட்டும் மிக மலிவாகிவிட்டதே. இப்போதெல்லாம் மரண அறிவித்தல்களை பார்க்கும் போது அவ்வளவு இலகுவாக அதனை கடந்து போக முடியவில்லை. இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய மன்றாடுவதா? துயரில் வாடுவோருக்கு ஆறுதல் கூறுவதா? இந்த நிலை நமக்கு எந்த நேரம் வருமோ என்று எண்ணுவதா? என்ற பல எண்ணங்களை ஒரே ஒரு மரண அறிவித்தல் தந்து விடுகிறது.
மரணம் ஒன்றும் புதிய விடயம் இல்லையே, வாழ்வின் கசப்பான உண்மை அது. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு நாள் இறக்கத்தான் போகின்றோம். ஆனால் இன்று, ஒரு நாளில் இறக்கும் உயிர்களின் எண்ணிக்கை வாழ்க்கை மீது ஒருவித பயத்தினை உண்டுபண்ணுகிறதே. எப்படி மீள்வது இந்நிலையிலிருந்து?
இனியாவது விழித்துக்கொள்வோமே, இத்தனை மரணங்களை பார்த்தும் எம் மனங்கள் இன்னும் கல்லாக இருப்பதால் என்ன பயன்? அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா என்று தெரியாத இந்த வாழ்வில், இந்த நொடியில் பிறர் மீது பொறாமை கொள்வது ஏன்? வீட்டுக்குள் முடக்கப்பட்ட போது பணத்தால் என்ன செய்ய முடிந்தது, பொருட்கள் வீடு தேடி வந்தாலும், சந்தோஷத்தை அதனால் கொண்டுவர முடியவில்லையே. அயலவர் பசியில் வாடும் போது, நாளைக்கு வேண்டும் என்று உணவை பதுக்கிவைத்துவிட்டு நிம்மதியாக தூங்க முடிகிறதா? நிரந்தரமில்லாத இந்த வாழ்வில் கோபங்களையும் பிரச்சிணைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து, வாழும் நொடியிலும் இறந்துகொண்டே வாழ்வது ஏன்?
எமக்கான கடமையை தள்ளிப்போடாமல் இன்றே செய்து முடிக்கப் பழகுவோம். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அன்பை வெளிப்படுத்த நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் வெளிப்படுத்த முடியாமலே போய்விடலாம். அன்பையும் மன்னிப்பையும் தாராளமாக கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் நிம்மதியாக வாழ ஆரம்பித்தால் இன்றைய நிலை கண்டு மனம் கலங்க வேண்டியதில்லை.
இறந்த ஒருவரின் புகைப்படத்தினை பதிவிட்டு அவரின் புகழை பக்கம் பக்கமாக எழுதுவதற்கு பதிலாக, அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை மனதார பாராட்டினால், கேட்பவரும் நெகிழ்வார் உங்களுக்கும் திருப்தி. செவிகளுக்கு எட்டாத பாராட்டுக்களையும் அனுபவிக்க முடியாத அன்பையும் நமக்குள் வைத்துக்கொள்வதைவிட சரியான நேரத்தில் உரியவருக்கு கொடுத்துவிட்டு பகிர்தலில் இன்பம் காணவும் இறக்கும்வரை இரக்கத்தோடு வாழவும், இன்னும் ஏன் தாமதம்?
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனிகுமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.