பிரேசிலில் விமான விபத்து : 14பேர் பலி
பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை 16) இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமேசான் மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த 12 பயணிகளும், விமானி ஒருவரும், துணை விமானி ஒருவரும் உயிரிழந்ததாக அமேசான் மாநிலத்தின் ஆளுநர் வில்சன் லிமா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மனாஸ் ஏரோடெக்ஸி ஏர்லைன்ஸ் இந்த விபத்து இடம்பெற்றதை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்க பிரஜைகளும் உள்ளடங்குவதாக பிரேசிலிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.