
தெற்கு இத்தாலியில் கப்பல் விபத்து : 11 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு
தெற்கு இத்தாலியில் இரண்டு கப்பல் விபத்துகளில் பதினொரு புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதுடன் 64 பேர் காணவில்லை என இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நாதிர் மீட்புக் கப்பலை இயக்கும் ஜேர்மன் உதவிக் குழுவானது மூழ்கிக் கொண்டிருந்த மரப் படகில் இருந்து 51 பேரை எடுத்ததாகவும், அதில் மயக்கமடைந்த இருவர் உட்பட, கப்பலின் கீழ் தளத்தில் 11 உடல்கள் சிக்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை எட்டு நாட்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து புறப்பட்ட படகு தீப்பிடித்து கவிழ்ந்ததால், 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் என்றும், 11 பேர் மீட்கப்பட்டு, இத்தாலிய கடலோரக் காவல்படையினரால் கலாப்ரியன் நகரமான ரோசெல்லா அயோனிகாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கப்பல் விபத்தில் சிக்கிய புலம்பெயர்ந்தோர் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது.
உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இறந்தவர்களின் உடல்களுடன் மரப் படகை இழுத்துக்கொண்டு நாடிர் லம்பேடுசா தீவுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சிரியா, எகிப்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஜெர்மன் தொண்டு நிறுவனத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு UNHCR, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் ஐ.நாவின் குழந்தைகள் நிறுவனமான UNICEF ஆகியவை கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு IOM இன் கூற்றுப்படி, 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய மத்தியதரைக் கடலில் 749 பேர் உட்பட 23,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர்.
இது உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதையாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் லிபியா கடற்கரையில் கடலில் இருந்து மட்டும் 11 உடல்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.