
சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
13 முதல் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தரம் 9, 10 மற்றும் 11ல் கற்கும் மாணவர்களில் 5.7 வீதமானவர்கள் ஒரு தடவையேனும் புகைபிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களில் 3.7 வீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் கூடுதலாக ஈ சிகரட் வகைகளை புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளைகளின் புகைப்பழக்கம் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
புகைப்பழக்கத்தினால் சுவாச மற்றும் புற்று நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.