உங்கள் பிள்ளைகள் தனிமையில் இருப்பதுபோல் உணர்கிறார்களா..? அவர்களை கையாளும் வழிகள்..!
சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் செய்யக்கூடிய ஒரு சில செயல்கள் அவர்களை தனிமையில் உணரச் செய்து விடும். அவ்வாறான ஒரு சில செயல்பாடுகள் என்ன என்பதையும், உங்கள் பிள்ளை அவ்வாறு உணராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம்.
ஒரு சில சமயங்களில் நமது பிள்ளைகள் தனிமையில் இருப்பதாக உணர்ந்து விடுவார்களோ என்ற பயம் ஏதாவது ஒரு தருணத்தில் பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு. தங்களுடைய பிள்ளைகள் எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்பது எல்லா பெற்றோர்களின் ஆசை.
உங்கள் பிள்ளைகள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்: உங்கள் பிள்ளை உங்களிடம் ஏதாவது சொல்ல நினைக்கும் பொழுது அதனை நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. அவர்கள் பேசுவதை ஆர்வத்தோடு நீங்கள் கேட்கும் பொழுது பெற்றோர்-பிள்ளை இடையேயான பந்தம் வலுப்படுத்தப்படும் என்றும், குழந்தையின் தன் மதிப்பீடு மேம்படுத்தப்படும் என்றும் ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் பேசும் பொழுது அவர்களது கண்களை பார்த்து அவர்கள் கூற நினைப்பதை ஆசையோடு கேளுங்கள்.
அட்டவணையில் அளவுக்கு அதிகமான செயல்பாடுகளை சேர்க்க கூடாது: உங்கள் குழந்தையின் அட்டவணையில் அளவுக்கு அதிகமாக நீங்கள் செயல்பாடுகளை சேர்க்கும் பொழுது நீங்கள் வகுத்த பாதையில் மட்டுமே பயணிப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கும். மாறாக அவர்களாக சில செயல்பாடுகளை செய்வதற்கும், ஓய்வு நேரத்தையும் நீங்கள் கட்டாயமாக அளிக்க வேண்டும்.
உங்கள் பிள்ளை தனிமையில் உணராமல் இருக்க உதவும் சில குறிப்புகள்: எவ்வளவு எளிமையான விஷயமாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப பாரம்பரியங்களில் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வார இறுதி நாட்களில் விளையாட்டுகள், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவது அல்லது கேம்பிங் பயணம் போன்றவற்றை திட்டமிடலாம். இவ்வாறு குடும்ப வழக்கங்களில் பிள்ளைகளை சேர்ப்பது அவர்களை ஸ்பெஷலாக உணர செய்து, பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.
முடிவுகள் எடுக்கும் பொழுது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளவும். உங்கள் பிள்ளைகளின் வயதை பொறுத்து குடும்ப முடிவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். டின்னருக்கான மெனுவை தேர்ந்தெடுப்பது அல்லது வார இறுதியில் என்ன செய்யலாம் என்பது போன்ற விஷயங்கள் இதற்கு சில உதாரணங்கள். இதனை நீங்கள் செய்யும் பொழுது அவர்களுடைய முடிவெடுக்கும் திறன்கள் மேம்படுத்தப்படும்
ஒவ்வொரு குழந்தைகளும் தனித்துவமானவர்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகளானது மாறுபடும். எனவே உங்களுடைய ஒவ்வொரு பிள்ளையுடன் தனித்தனியாக நேரத்தை செலவிட்டு, அவர்களுக்கான தனிப்பட்ட விருப்பங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுடைய சாதனைகள் சிறியதோ பெரியதோ அதற்கான தகுந்த பாராட்டுக்களை வழங்குங்கள். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும்.