
அலுவலக நேரத்தில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு?
அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கான பணிகளைத் தொடங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சில இடங்களில் அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் பேஸ்புக், வட்ஸ்அப்பில் உலாவிய படி சேவைகளைப் பெற வந்த மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை தான் அவதானித்ததாக கூறினார்.
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடலாமா என யோசிப்பதாக அவர் கூறினார்.
சில தனியார் அலுவலர்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் கைப்பேசிகளை நுழைவாயிலில் உள்ள பெட்டகத்தில் வைத்துவிட்டு, பணி முடிந்து வெளியேறும் போது அதனை திரும்ப எடுத்துச் செல்லவதாக கூறினார்.
தேவை ஏற்பட்டால் அத்தகைய முடிவுகளை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பணியில் இருக்கும் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கைபேசிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், பொதுச் சேவை என்பது வேலைக்குச் செல்வதும் சம்பளம் பெறுவதும் மட்டும் அல்ல என்றும் வலியுறுத்திய அவர் பெறும் சம்பளத்திற்கு நியாயமான சேவையை வழங்குமாறு அரச சேவையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்